This Article is From Nov 11, 2019

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் முயற்சியை கைவிடுகிறோம்: பாஜகவின் அதிரடி முடிவு!!

கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் அதிகாரப்பகிர்வு மோதல் நீடித்து வந்த நிலையில், பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் முயற்சியை கைவிடுகிறோம்: பாஜகவின் அதிரடி முடிவு!!

தேவேந்திர ஃபட்நாவிஸ் வீட்டில் நடந்த பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (File)

Mumbai:

சிவசேனாவுடனான அதிகாரப்பகிர்வு மோதல் முடிவுக்கு வராத நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை என மாநில பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக முக்கிய குழு உறுப்பினர்களுடன் இரண்டு கட்ட ஆலோசனை நடைபெற்றதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பாஜகவின் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது சிவசேனாவுக்கு முக்கிய பொறுப்பை வைத்துள்ளது. பாஜக தங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், புதிய ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறோம் என்ற மீண்டும் மீண்டும் சிவசேனா கூறிவந்தது.

இதுதொடர்பாக இன்று மாலை ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறும்போது, பாஜக - சிவசேனா கூட்டணிக்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. 

சிவசேனா மக்களின் ஆணையை அவமதிக்க விரும்பினால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை அமைக்கட்டும், அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று கூறினார். 

தேர்தல் முடிவுகள் வெளிவந்து 2 வாரங்களையும் கடந்துவிட்ட நிலையில், நேற்றைய தினம் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிவசேனா தனது 50:50 அதிகாரப்பகிர்வு என்ற கோரிக்கையில் எவ்வளவு பிடிவாதமாக இருந்தாலும், அதற்கு பாஜக செவிசாய்க்க மறுத்து வருவதால், பாஜக மீது சிவசேனா கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. இதனிடையே, மாற்று ஆட்சி அமைக்க முடிவு செய்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு சிவசேனா தூதுவிட்டது. 

எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதையேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும், மக்கள் தங்களை எதிர்கட்சி வரிசையில் அமரும் பிடியே உத்தரவிட்டுள்ளனர். நாங்கள் அதனையே கடைப்பிடிப்போம் என்றும் வெளிப்படையாக தெரிவித்தார். 

இந்நிலையில், பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து தங்களது எம்எல்ஏக்களை காக்க அவர்களை மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து சிவசேனா பாதுகாத்து வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் தங்களது எம்எல்ஏக்களுக்கு பாஜக அல்லது சிவசேனா வலைவீசி அழைக்கக் கூடும் என்ற கவலையில் இருந்தனர். 

சிவசேனாவின் எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து 2 மணிநேர தூர தொலைவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸூம் தனது எம்எல்ஏக்களை மாநிலத்தில் இருந்து வெளியேற்றியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 41 பேரும் ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, எம்எல்ஏக்களை குதிரைபேரத்திற்கு அழைக்க பாஜக அனைத்து வழிகளிலும் முயற்சிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் அவ்வாறு பேரம் செய்ய முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

.