This Article is From May 18, 2020

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

மேற்கு வங்கம் - ஒடிசா கடற்கரைகளிலும், வடக்கு வங்கடல் பகுதிகளிலும் புதன்கிழமை வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

ஒடிசாவின் வடக்கு பகுதியிலே அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் தீவிரம் அடைந்து வருகிறது
  • ஒடிசாவை ஆம்பன் புயல் கடுமையாக தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
  • பிரதமர் மோடி தலைமையில் ஆம்பன் புயல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அதி தீவிர புயலாக மாறிய ஆம்பன் புயல், "சூப்பர் புயலாக" தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த புயல் வங்கதேச கடற்கரை பகுதியில் புதன்கிழமையன்று கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்ககடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து, வடக்கு, வடக்கிழக்காக ஆம்பன் புயல் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆம்பன் புயலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். 

இதுதொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, 'ஆம்பன் புயலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பாகவும் பேசப்பட்டது. மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதற்கு பிரார்த்திக்கிறேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்' என்று கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்பு ஏற்பட்ட போது, 11 லட்சம் பேரை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே முக்கிய காரணமாகும். 

ஆம்பன் புயலுக்காக கஞ்சம், கஜப்தி, பூரி, ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், மயூர்பஞ்ச், ஜஜ்பூர், கட்டாக், குர்தா மற்றும் நாயகர் உள்ளிட்ட 12 கடலோர மாவட்டங்களில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. 

ஒடிசா, மேற்குவங்கத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையே சேர்ந்த (NDRF) 17 குழுவினர் பணியில் உள்ளனர். 7 குழுவினர் மேற்குவங்கத்தில் உள்ள 6 மாவட்டத்திலும், 10 குழுவினர் ஒடிசாவிலும் பணியில் உள்ளளனர். ஒவ்வொரு குழுவிலும் 45 நபர்கள் உள்ளனர். 

இந்த புயலால் ஒடிசாவின் வடக்கு பகுதியிலே அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மோகபத்ரா கூறியுள்ளார். 

மேற்கு வங்கம் - ஒடிசா கடற்கரைகளிலும், வடக்கு வங்கடல் பகுதிகளிலும் புதன்கிழமை வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

.