This Article is From Apr 25, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 24,506ஆக உயர்வு; 775 பேர் உயிரிழப்பு!

Coronavirus Cases, India: கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 24,506ஆக உயர்வு; 775 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 24,000ஐ தாண்டியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 24,506ஆக உயர்வு
  • மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 775 ஆக அதிகரிப்பு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 775 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 1,429 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச்.25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

எனினும், நாடு முழுவதும் தொடர்ந்து, மால்கள் செயல்பட அனுமதி அளிக்கவில்லை. தொற்றுநோய் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 வாரங்களுக்கு முன்னதாக ஆலோசித்த நிலையில், தற்போது படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

நாடு முழுவதும் உள்ள வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பெரும் நிவாரணமாக சந்தை வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள கடைகளை திறக்க அனுமதியில்லை. அதேபோல், இந்த தளர்வு என்பது, ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில், அதிகபட்சமாக 1,752 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுநாள் வரையில் இல்லாத அளவு பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாவது 7.5 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பெரும் வெற்றியை தந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது. நிர்வாகத்தாலும், மக்களின் ஒத்துழைப்பாலும், கொரோனாவின் சங்கிலி பரவல் என்பது தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பச்சை மண்டலங்களில் புதிதாக பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த பச்சை மண்டல பட்டியலில் புதிதாக பல மாவட்டங்கள் இணைந்துள்ளன என சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாஇர லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலே மகாராஷ்டிராவில் தான் அதிகளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அங்கு தான் 1லட்சத்திற்கும் மேலாக அதிகளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 1,02,189 சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 94,485 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது வரை 6,817 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 301 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் மாநில தலைநகர் உட்பட 5 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் சென்னை, மதுரை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த முழு ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

.