This Article is From Jan 10, 2019

'நடுங்குவதை நிறுத்தி விட்டு என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்' - மோடியை சீண்டிய ராகுல்

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை பாதுகாப்பதற்கு ஒரு பெண் (பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்) தேவைப்படுகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

'நடுங்குவதை நிறுத்தி விட்டு என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்' - மோடியை சீண்டிய ராகுல்

ரஃபேல் விவகாரம் தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் மோடி தவிர்த்து வருகிறார். இதனை ராகுல் விமர்சிக்கிறார்.

Agra:

'நடுங்குவதை நிறுத்தி விட்டு ஒரு ஆணாக இருந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்' என்று மோடியை பார்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது. ரஃபேல் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமே நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருந்தார்.

இதனை குறிப்பிட்டுக் காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பாதுகாப்பதற்கு ஒரு பெண் (பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்) தேவைப்படுகிறார் என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தர பிரதேச பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, '' நாட்டில் முதன்முறையாக பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக எனது அமைச்சரவையில் செயல்பட்டு வருகிறார். இது கவுரவம் சார்ந்த விஷயம். எங்களது பாதுகாப்பு அமைச்சர் எதிர்க்கட்சியினர் அனைவரையும் வாயடைக்க செய்து விட்டார். அவரது பதிலுக்கு எதிர்க் கேள்வி எழுப்ப முடியாதவர்கள் அவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஒரு பெண் அமைச்சரை மட்டும் விமர்சிக்கவில்லை. நாட்டின் பெண்கள் சக்தியையே தரம் தாழ்த்தி பேசி விட்டனர்'' என்று கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் ராகுல் காந்தி பதில் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ''மதிப்பிற்குரிய மோடிஜி. நம்முடைய கலாச்சாரம் என்பது பெண்களை வீட்டில் இருந்தே மதிக்கத் தொடங்குவதில்தான் ஆரம்பிக்கிறது.

முதலில் நடுங்குவதை நிறுத்துங்கள். ஆண்மகனாக இருந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும்போது அதனை விமானப்படையும், பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்த்ததா? இல்லையா?.'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.