This Article is From Apr 29, 2020

'கொரோனா பாதிப்பிலிருந்து மீள பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கான ஆதாரம் இல்லை' - மத்திய அரசு

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லியில் சோதனை அடிப்படையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

'கொரோனா பாதிப்பிலிருந்து மீள பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கான ஆதாரம் இல்லை' - மத்திய அரசு

பிளாஸ்மா சிகிச்சை குறித்த முக்கிய தகவலை சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • ''பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா குணம் ஆகும் என்பதற்கு ஆதாரம் இல்லை''
  • பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது
  • பிளாஸ்மா சிகிச்சை பலனை அளித்ததாக டெல்லி முதல்வர் முன்பு கூறியிருந்தார்
New Delhi:

கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா பாதிப்பிலிருந்து சிலர் மீண்டதாக டெல்லி அரசு தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு பிளாஸ்மா சிகிச்சை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது. 

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணம் அடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மா மூலக்கூறுகள் பெறப்பட்டு, அவை கொரோனா அதிகம் பாதித்தோரின் இரத்தத்தில் செலுத்தப்படும். குணம் அடைந்தவர்களின் இரத்தத்தில் தொற்றை எதிர்க்கும் சக்தி இருக்கும்.

இதனால் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களின் உடலில் பிளாஸ்மா செலுத்தும்போது, அவர்கள் குணம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உலகில் முன்பு பல நோய்கள் தாக்கப்பட்டபோது, இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை கடைபிடிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்புக்கு பல்வேறு மருத்துவர்கள் பிளாஸ்மா முறையை கடைபிடிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். 

இருப்பினும் சோதனை முயற்சியாக இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது முழு வெற்றி அடைந்தால்தான், பிளாஸ்மா சிகிச்சையை பரவலாக்க அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கும்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லியில் சோதனை அடிப்படையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா பாதிப்பு குணம் அடையும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

.