This Article is From Aug 18, 2018

கேரள வெள்ளம்: பிரதமர் 500 கோடி ரூபாய் உடனடி நிதி அறிவிப்பு

தற்போது அவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

கேரள வெள்ளம்: பிரதமர் 500 கோடி ரூபாய் உடனடி நிதி அறிவிப்பு
Thiruvananthapuram:

கேரளாவில் நிலவி வரும் மோசமான மழை வெள்ள காரணமாக இதுவரை 324 பேர் பலியானதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று காலை பிரதமர் மோடி வான் வழியாக வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாக இருந்த பயணம், மோசமான வானிலை காரணமாக தாமதமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகள் சில இடங்களில் மூழ்கியும், சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டும், சில இடங்களில் துண்டிக்கப்பட்டும் இருக்கின்றன. பலர் வீடுகளை இழந்து, இன்னும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் இன்றும் மிக கன மழை இருக்கும் என அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 30 ஹெலிகாப்டர்களும், 320க்கும் மேற்பட்ட படகுகளும், கேரளா மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் கூடிய கன மழை இன்றும் நாளையும் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய கேரளா மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளது. 3,10,000 பேர், 2000 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள நிலவரம் குறித்த அண்மைத் தகவல்கள்:

1. " கேரளாவில், கடும் வெள்ளம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைப் பற்றி கேட்டறிந்தேன். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். வான் வழியாக பாதிப்புகளை பார்வையிட்டேன். தேசம் கேரளாவுடன் உறுதியாக நிற்கிறது" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

2. சந்திப்புக்கு பிறகு, உடனடி நிதி உதவியாக 500 கோடி ரூபாயை அறிவித்தார் பிரதமர் மோடி. இதற்கு முன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 கோடி ரூபாய் அறிவித்திருந்தார். மேலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவியையும் அறிவித்தார். காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயையும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

3. கேரளா, அதன் வரலாற்றில் இதைப் போன்ற வெள்ளத்தை கண்டதில்லை. 324 பேர் இறந்துள்ளனர். 223139 பேர், 1500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதுவரை, 42 கடற்படை குழு, 16 ராணுவ குழு, 28 கடலோர காவல்படை குழு, 39 தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

4. பெரியாறு ஆற்றிலிருந்து வெளியேறும் வெள்ள நீரால், எர்ணாகுளம் மற்றும் திருச்சூரின் பல பகுதிகளில் மூழ்கியுள்ளன. ஆலப்புழா, எர்ணாகுளம், பட்டணம்திட்டா, திருச்சூர் மாவட்டங்களில் மக்கள் மரத்தின் மீதும் வீட்டுக் கூரையின் மீதும் ஏறி, தங்களைக் காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறார்கள். இந்த மாவட்டங்களில் இருக்கும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொடர்ந்து, தங்களால் மீட்புப் படையினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தங்களைக் காப்பாற்ற வருமாறும் சமூக ஊடகங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

5. பல அவசர கால நிவாரண முகாம்களிலும் நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ளிருந்தும் பலர் தங்களை காப்பாற்ற வருமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

6. பட்டணம்திட்டாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் பெய்து வரும் மழையின் அளவு 321 சென்டி மீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இடுக்கி, கேரளாவின் மற்ற மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7. 10,000 கிலோ மீட்டருக்கும் மேலான சாலைகள், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பாதி இடங்களுக்கு மின்சாரத் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

8. கொச்சி விமான நிலையத்தில் வரும் 26 ஆம் தேதி வரை, விமான இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவணந்தபுரம் விமான நிலையம் தான் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. அதேபோல ரயில் போக்குவரத்தும், கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

9. ‘கேரளா முழுவதிலும், கர்நாடகாவின் குடகிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதுதான் காங்கிரஸின் சேவை மற்றும் அன்பு செய்யும் மனப்பான்மையை காண்பிப்பதற்கான சரியான நேரம். நமது தொண்டர்கள், தேவைபடுபவர்களுக்கு விரைந்து உதவி செய்திடுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

10. ஐக்கிய அரபு அமீரகம், கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு தனி குழுவை அமைக்க முனைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், ஷேக் கலீஃபா, கேரளாவில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவ ஒரு அவசர கமிட்டியை அமைக்க உத்தரவிட்டுள்ளார். 
 

.