This Article is From Mar 07, 2020

48 மணிநேர தடைவிதிக்கப்பட்ட 2 செய்தி சேனல்களும் தற்போது மீண்டும் ஒளிபரப்பில்!

Delhi Violence: டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால் 2 கேரள சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

48 மணிநேர தடைவிதிக்கப்பட்ட 2 செய்தி சேனல்களும் தற்போது மீண்டும் ஒளிபரப்பில்!

Delhi Violence: டெல்லி வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தடைவிதிக்கப்பட்ட 2 செய்தி சேனல்களும் தற்போது மீண்டும் ஒளிபரப்பில்!
  • 2 மலையாள செய்தி சேனல்களுக்கும் 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டிருந்தது
  • நள்ளிரவு 1.30 மணி அளவில், ஏசியாநெட் ஒளிபரப்பை தொடங்கியது
Thiruvananthapuram/ New Delhi:

டெல்லி வன்முறையை ஒளிபரப்பியதற்காக ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் உள்ளிட்ட இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கும் 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டு 2 சேனல்களும் தற்போது மீண்டும் ஒளிபரப்பைத் தொடர்ந்து வருகிறது. 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் நடந்த வன்முறையில் 50 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாகத் தொடர்ந்து செய்திகள் வெளியிட்ட 2 மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேரம் தடைவிதிக்கப்பட்டு நேற்று மாலை 7.30 மணி அளவில், ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 1.30 மணி அளவில், ஏசியாநெட் தனது ஒளிபரப்பை மீண்டும் துவங்கியது. தொடர்ந்து, இன்று காலை மீடியா ஒன் செய்தி சேனலும் தனது ஒளிபரப்பை துவங்கியுள்ளது. 

இதுதொடர்பான மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அளித்த உத்தரவில், ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் உள்ளிட்ட இரண்டு செய்தி சேனல்களும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் 1994-ன் விதிகளை மீறியுள்ளது. கடந்த 25ம் தேதி ஒரு வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்திக் காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டது போல் தெரிவதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும், ஏசியாநெட் சேனல், இந்த தாக்குதல் சம்பவத்தை ‘வகுப்புவாத வன்முறை' என்று குறிப்பிட்டதோடு, மத்திய அரசு இந்த வன்முறை நடக்க ஒப்புதல் அளித்ததாகவும் அதன் நெறியாளர்களும், நிருபர்களும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்ந்து, அந்த சேனல்களின் ஒளிபரப்பு நகலை ஆராய்ந்ததாகத் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதில்,  சாலையில் செல்பவர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷமிட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்... முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள்.. ஆனால், மத்திய அரசு இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த முடிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்".

மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தைக் குவிப்பதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு சேனல்களில் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரள சேல்கள் மீதான தடைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரம், எம்.பி.யுமான மனிஷ் திவாரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல், எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நீதிபதி போல் முடிவெடுப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 2 தொலைக்காட்சிகள் தடை செய்யப்பட்டது நீதிக்கு நேர்ந்த பரிதாபம் என்றும் தொலைக்காட்சிகள் மீதான தடையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களின் ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 48 மணி நேரம் தடை நீக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இரண்டு சேனல்களும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

.