This Article is From Oct 13, 2018

ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கு இந்தியா தேர்வு..!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

மனித உரிமை ஆணையத்தின், ஆசிய பிசிபிக் பிரிவில் இணைய இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது

ஹைலைட்ஸ்

  • இந்தியாவுக்கு 188 வாக்குகள் கிடைத்தன
  • மனித உரிமை ஆணையத்துக்கு புதியதாக 18 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்
  • இந்தியா, 3 ஆண்டுகளுக்கு ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும்
United Nations:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 முதல் 3 ஆண்டுகளுக்கு, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகிக்கும் இந்தியா. இது குறித்து வாக்கெடுப்பின் போது, 188 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா சபையில், மனித உரிமை ஆணையத்துக்குத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கவுன்சிலில் உறுப்பினராக இடம் பெற 97 வாக்குகள் வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் வாக்கெடுப்பில் 18 புதிய உறுப்பினர்கள், பெரும்பான்மை வாக்குப் பெற்று, மனித உரிமை ஆணையத்துக்குத் தேர்வாகினர். 

மனித உரிமை ஆணையத்தின், ஆசிய பிசிபிக் பிரிவில் இணைய இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பக்ரைன், இந்தியா, வங்கதேசம், ஃபிஜி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஆசிய பிசிபிக் பிரிவில், வாக்கெடுப்பின் மூலம் இணைந்துள்ளன.

மனித உரிமை ஆணையத்தில் இந்தியா தேர்வானது குறித்து ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர், சையத் அக்பருதீன், ‘சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருக்கும் செல்வாக்கைத் தான் இந்த பெரும்பான்மை வாக்கு நிரூபிக்கின்றது. எங்களுக்கு ஆதரவளித்த மற்ற நாடுகளுக்கு மிக்க நன்றி’ என்று தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில், இந்தியா இதற்கு முன்பு இரண்டு முறை உறுப்பினராக இருந்தது. 2011 முதல் 2014 வரையிலும், 2014 முதல் 2017 வரையிலும் இதற்கு முன்னர் இந்தியா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தது. ஆணையத்தில் தொடர்ந்து இரண்டு முறை உறுப்பினராக இருந்த காரணத்தால், உடனடியாக தேர்வு செய்யப்பட முடியாத சூழலில் இருந்தது இந்தியா. இந்நிலையில், தற்போது மீண்டும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா மனித உரிமை கவுன்சலில் 47 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பார்கள். உலக அளவில் நில அமைப்பு சார்ந்து 5 பிரிவுகளாக உறுப்பினர்கள் தேந்தெடுக்கப்படுவார்கள். ஆப்ரிக்க நாடுகளுக்கு 13 இடங்கள், ஆசிய பிசிபிக் நாடுகளுக்கு 13 இடங்கள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 6 இடங்கள், லத்தீன் மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 8 இடங்கள், மேற்கு ஐரோப்பியா மற்றும் பிற நாடுகளுக்கு 7 இடங்கள் என்று உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் பிரிக்கப்பட்டுள்ளது. 

.