This Article is From Nov 26, 2018

“ராமர் கோயிலை கட்டாவிட்டால் ஆட்சியில் இருக்க மாட்டீங்க!” - பாஜகவை மிரட்டும் சிவசேனா

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ராமர் கோயிலை மையப்படுத்தி பாஜக அரசுக்கு அவர் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

அயோத்தியில் சிவசேனா, வி.எச்.பி. தொண்டர்கள் முகாமிட்டிருப்பதால் பதற்றம் காணப்படுகிறது.

Ayodhya, Uttar Pradesh:

ராமர் கோயிலை கட்டாவிட்டால் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள்” என்று பாஜகவை சிவசேன தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராமர் கோயில் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் சிவசேனா கட்சி, அயோத்திக்கு சென்று புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் 2 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

“ராமர் கோயிலை கட்டுவோம் என்கிறீர்கள்; தேதியை அறிவியுங்கள்” என்று கூறி மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது. இதே கோரிக்கையை வி.எச்.பி. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் முன் வைக்கின்றன.

இந்த நிலையில், சிவசேனா, வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகள் அயோத்தியில் பேரணியை நடத்துகின்றன. இதில் பல்வேறு இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். சுமார் 3 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தி கொதிநிலைக்கு மாறியுள்ளது.
ராமர் கோயில் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “ராமர் கோயிலை கட்டாவிட்டால் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள்” என்று எச்சரித்துள்ளார். இதற்கு பாஜகவிடம் இருந்து என்ன பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சும்மாவே அயோத்தியில் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும். இப்போது லட்சக்கணக்கில் இந்துத்வ அமைப்பினர் கூடவுள்ளதால் என்ன செய்வதென்ற நெருக்கடியில் உ.பி. போலீசார் உள்ளனர். அவர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

35 சீனியர் போலீஸ், 160 இன்ஸ்பெக்டர்கள், 700 கான்ஸ்டபிள், 42 துணை ராணுவ படை, அதிரடிப்படை என பாதி ஃபோர்சும் அயோத்தியில் இறக்கிவிடப்பட்டுள்ளது.
 

.