This Article is From Feb 28, 2020

டெல்லியில் 85 வயது பாட்டியை வீட்டுடன் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!!

டெல்லி வன்முறை : உயிரிழந்த 85 வயது அக்பரியின் மகன் NDTVக்கு அளித்த பேட்டியில் தனது தாயார் 3-வது மாடியிலிருந்ததாகவும், வீட்டை வன்முறைக் கும்பல் முற்றுகையிட்டதைப் பிள்ளைகள் நேரில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை : தீயிட்டு கொளுத்தப்பட்ட வீட்டில் மூதாட்டி அக்பரி சிக்கிக்கொண்டார்.

ஹைலைட்ஸ்

  • 200பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
  • கையில் தீக்காயம், மூச்சுத் திணறலால் மூதாட்டியின் உயிர் பிரிந்துள்ளது
  • சுமார் 10 மணி நேரத்திற்கு பின்னர் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
New Delhi:

டெல்லி வன்முறையில் மேலும் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக 85 வயது மூதாட்டி ஒருவர் அவரது வீட்டுடன் சேர்த்து வன்முறைக்கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளார். டெல்லியின் காம்ரி எக்ஸ்டென்ஷனில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்று காலையில் 85 வயதான அக்பரி வீட்டிற்கு வந்த வன்முறைக் கும்பல் கொடூரச் செயலை செய்துள்ளது. இதுதொடர்பாக அக்பரியின் மகன் சயீத் சல்மானி NDTVக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

காலை 11 மணி இருக்கும். வீட்டில் பால் இல்லையென்று பிள்ளைகள் கூறினார்கள். இதையடுத்து நான் பால் வாங்கக் கடைக்குச் சென்று விட்டேன். நான் திரும்பி வந்தபோது எனது மகன் என்னிடம், அப்பா 150 - 200 பேர் வீட்டுக்கு வந்தனர் என்றார். வந்தவர்கள் இந்துக்களா முஸ்லிம்களா என்று தெரியாது. எனது 2 மகன்களும், 2 மகள்களும் வீட்டை உட்புறமாகப் பூட்டிக் கொண்டனர். அவர்கள் 15 - 20 வயதுடையவர்கள்.

2lboa82

உயிரிழந்த 85 வயது மூதாட்டி அக்பரி.

வீட்டின் மேல் மாடியில் எனது தாயார் இருந்தார். வன்முறைக் கும்பல் தீயிட்டுக் கொளுத்தியபோது அவர் வீட்டுக்குள் மாட்டிக் கொண்டார். நான் அங்குச் சென்றால் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தின் பேரில் நான் அங்குச் செல்லவில்லை. ஆனால் எனது பிள்ளைகள் தொடர்ச்சியாக அப்பா எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கத்திக் கொண்டே இருந்தனர். 

வீட்டுக்குள் மாட்டிய எனது தாயார் அக்பரி கையில் தீக்காயம் அடைந்ததுடன், மூச்சுத் திணறி உயிர் விட்டார். பிள்ளைகள் எப்படியோ தப்பித்துக் கொண்டனர். 

வீட்டின் தரை தளத்தில் எனது துணிக்கடை இருந்தது. அங்குதான் வன்முறைக் கும்பல் முதலில் தீயிட்டுக் கொளுத்தியது. இதன்பின்னர் வீட்டின் மற்ற மாடிகளில் தீ வைத்தனர். 

தாயாரின் உடல் 10 மணிநேரமாக எரிந்த வீட்டிற்குள்தான் கிடந்தது. தீயணைப்பு படையினர் இரவு 9.30-க்கு வந்துதான் உடலை மீட்டுத் தந்தனர். நிச்சயம் எனது தாயார் உதவிக்காகக் குரல் எழுப்பியிருப்பார். ஆனால் யாரும் காப்பாற்றவில்லை. மூச்சுத் திணறலில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தலைநகரில் கடந்த ஞாயிறு முதற்கொண்டு நடந்து வரும் கலவரத்தில் 34 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 

.