This Article is From May 14, 2020

ஊரடங்கு நீட்டிப்பு? ஜூன் 30 வரையிலான ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகள் ரத்து!

தற்போது இயக்கப்பட்டு வரும் 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஊரடங்கு நீட்டிப்பு? ஜூன் 30 வரையிலான ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகள் ரத்து!

ஹைலைட்ஸ்

  • ஜூன் 30 வரையிலான ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகள் ரத்து!
  • 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும்
  • சுமார் 7.9 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்
New Delhi:

பயணிகள் ரயில்கள், மெயில்/விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து வகையான ரயில்களுக்கும் ஜுன் 30ம் தேதி வரையிலான பயணச்சீட்டு முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து, அதற்கான முழு தொகையையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும், வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பி செல்வதற்காக தற்போது இயக்கப்பட்டு வரும் 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்ட 94 லட்சம் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் மட்டும் ரயில்வே நிர்வாகம் ரூ.1,490 கோடி திருப்பி அளித்துள்ளது.

இதேபோல், மார்ச்.22ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை முதல் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்காக ரூ.830 கோடி தருப்பி அளித்துள்ளது. 

ஏற்கனவே, 4வது கட்டமாக ஊரடங்கு இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்ததிருந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது, ஜூன்.30ம் தேதி ரயில் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு 3 நாட்கள் முன்பு அதாவது, மார்ச்.22ம் தேதி முதலே பயணிகள் ரயில் உட்பட அத்தியாவசிய தேவைகள் இல்லாத அனைத்து விதமான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. 

இதனிடையே, படிப்படியாக பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்கும் வகையில் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஊரடங்கு முடிவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், இயல்பு வாழ்கையை மீண்டும் தொடங்கலாம் என அரசு நினைத்தது. 

இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் 15 சிறப்பு ரயில்கள் இயங்கத் தொடங்கியது. டெல்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில் அசாம், மேற்குவங்கம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களை இணைத்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் வரை 642 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்கள் இயங்கியுள்ளன. இந்த ரயில்கள் மூலம் சுமார் 7.9 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச்.25ம் தேதி நாடு முழுவதும் முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல், உணவில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தனர்.

ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளும் இல்லாததால், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல், நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்ல தொடங்கினர். இது ஆளும் அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததும், அரசு அவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாட்டை செய்தது.

.