This Article is From May 10, 2020

இந்தியாவில் 63 ஆயிரத்தினை நெருங்கும் கொரோனா பாதிப்பு: முக்கிய தகவல்கள்!

. இன்றை நிலவரப்படி தேசிய அளவில் 62,939 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 2,100 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 19,358 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் 63 ஆயிரத்தினை நெருங்கும் கொரோனா பாதிப்பு: முக்கிய தகவல்கள்!

உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தினை கடந்திருக்கிறது.

New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தினை கடந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தினை கடந்திருக்கிறது. இன்றை நிலவரப்படி தேசிய அளவில் 62,939 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 19,358 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து குஜராத்தில் அதிக பாதிப்பு உள்ளது. இம்மாநிலத்தில் 7,796 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 3,277 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 128 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரா, டெல்லி, மும்பை மற்றும் புனே, குஜராத்தின் அகமதாபாத், தமிழகத்தின் சென்னை போன்ற  நகரங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு எதிராக உள்நாட்டிலேயே தடுப்பு மருந்தினை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR), பயோடெக் நிறுவனமான பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (BBIL) உடன் கைகோர்த்துள்ளது. புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆரின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் (NIV) தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபுகளை பயன்படுத்தி தடுப்பூசி உருவாக்கப்படும் என உயர்மட்ட மருத்துவ அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • மேற்குறிப்பிட்டபடி தடுப்பூசி உருவாக்குவதற்கு இரு கூட்டாளிகளின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி உருவாக்க ஐபிஎம்ஆர்-என்ஐவி(ICMR- NIV) இரண்டும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டுக்கு வேண்டிய ஆதரவினை வழங்கும். இவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் விலங்குகள் மீதான பரிசோதனைக்கும், அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கும் அனுமதி பெற தயாராகும் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பெரிய  பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தற்போது வரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
  • தற்போது, லேசான கொரோனா தொற்று நோயாளிகளின் அறிகுறிகளுக்கான வரம்புகளை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது. பி.சி.ஆர் அல்லது ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனைகள் மூலமாக கொரோனா தொற்றை கண்டறிந்து வருகிறோம். இந்த நிலையில் நோயாளிகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படும்போதும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
  • கேரளாவை பொறுத்த அளவில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதுவும்  இன்று இயங்காது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும், கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் என குறிப்பிட்ட சில நிலைகளை நோக்கி மாநிலம் நகர்தலை முன்னெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
  • அபுதாபி மற்றும் துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாகக் கேரளா வந்தடைந்த 363 பேரில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் கோழிக்கோடு பகுதியிலும், மற்றொருவர் கொச்சியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் முதலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் கேரளா அடையாளம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மகாராஷ்டிராவைப் பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான அதிகமான எண்ணிக்கையாகும். அதேபோல 1,165 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இம்மாநிலத்தில் 20,228 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 779 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மும்பையில் அதிகப்பட்சமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • உத்தரப்பிரதேசத்தில், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் முதலில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற மருத்துவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு பிறகு அவரது உடலில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவரது இறுதி இரண்டு பரிசோதனை முடிவுகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட ஆரோக்ய சேது செயலி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. நாடு முழுவதும் உள்ள 650 தொற்று பரவல் மையங்களையும்(hotspots), 300க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் தொற்று பரவல் மையங்களையும் குறித்து அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக அறிவிக்க இந்த செயலி பயன்படுத்தப்பட்டது. இது இல்லாதிருந்தால் நாம் தொற்று பரவல் மையங்கள் குறித்த தகவல்களைப் பெற தவறியிருப்போம் என என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.
  • கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு தனது சுகாதாரக் குழுக்களை அனுப்பும் என சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குழுவானது மாநில சுகாதாரக் குழுக்களோடு இணைந்து, மாநில சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பங்காற்றும். குஜராத், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி, கூட்டுச் செயலாளர் நிலை நோடல் அதிகாரி மற்றும் பொது சுகாதார நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுக்களை அனுப்பும். ஏற்கெனவே கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மத்திய அரசு மருத்துவக் குழுக்களை அனுப்பியிருந்து. தற்போது அந்த எண்ணிக்கையை விட, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது சுகாதாரக் குழுக்களின் எண்ணிக்கையானது அதிகமாகும்.
  • மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத்தின் நிகழ்வில் பங்கெடுத்த 567 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் தொற்று இல்லையெனில் தங்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என டெல்லியின் பிரதேச ஆணையர் சமீபத்தில் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
  • சர்வதேச அளவில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40,01,437 ஆக அதிகரித்துள்ளது. 2,77,127 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
  • அமெரிக்காவை பொறுத்த அளவில் இதுவரை 13,05,544 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,618 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஐரோப்பாவை பொறுத்த அளவில் 17,08,648 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,55,074 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

.