This Article is From May 03, 2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தினை நெருங்குகிறது!

கடந்த வாரத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது தற்போது 180 நாடுகளைப் பாதித்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தினை நெருங்குகிறது!

நாடு முழுவதும் 39,980 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு முடக்க உத்தரவு(LOCKDOWN) அமலில் இருக்கக்கூடிய நிலையில், நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தக் காலகட்டங்களில் தொற்று பரவலின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,644  பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் விட பெரிய அளவிலான எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் 39,980 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது தற்போது 180 நாடுகளைப் பாதித்திருக்கிறது. இந்தியாவில் தொற்று பாதித்த நகரங்களைச் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என அடையாளப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. இதன் அடிப்படையில் நாளை முதல் பச்சை மண்டலம் மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் அமலாக்கப்பட இருக்கின்றது. சிவப்பு மண்டலங்களில் தளர்வுகள் பெரிய அளவில் ஏதும் இல்லை.

  • தேசிய அளவில் கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் பணியாற்றுபவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ராணுவ விமானங்கள் மருத்துவமனைகளின் மீது மலர் தூவியும், கப்பல்கள் ஒளியை ஒளிரச்செய்தும் தங்கள் நன்றியுணர்வினை வெளிப்படுத்துகின்றன.
  • இந்த நடவடிக்கையை அறிவித்த நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், இது சிறப்பு நன்றியுணர்வின் வெளிப்பாடு என குறிப்பிட்டிருந்தார். “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியினை சமாளிக்கத் தேசம் ஒன்றிணைந்து நிற்கின்றது. இம்மாதிரியான நெருக்கடிகள் வரும்போது நாம் செய்ய வேண்டியது ஒன்றிணைந்து நிற்பதே“ என ராவத் கூறியிருந்தார். முன்னாதாக பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் பணியாற்றுபவர்களை பெருமைப்படுத்த மக்கள் வீடுகளின் பால்கனியில் நின்றும், கைகளைத் தட்டியும் தங்கள் நன்றியுணர்வினை வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இந்த வகையில் இது மூன்றாவது முறையான நன்றி வெளிப்பாடாகும்.
  • முன் ஏற்பாடுகள் இல்லாத இந்த முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்தனர். இந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்பச் சிறப்பு ரயில்களை மத்திய அரசு அனுமதித்தது.
  • கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை மீட்பதில் அரசு முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. மீட்பு விகிதம் இன்று காலை நிலவரப்படி 26.59 ஆக உள்ளது. இதுவரை 10,633 நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
  • கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிராவையடுத்து குஜராத் உள்ளது. 5,054 பேர் இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 262 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேபோல தேசிய தலைநகர் டெல்லியில் 4,122 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 90க்கும் அதிகமான கட்டுப்பாட்டு மண்டலங்களை டெல்லி கொண்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கையை மேலும், இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு ஒழுங்குமுறை - சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA), உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நடவடிக்கையை மே 17 வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
  • கிழக்கு டெல்லியின் மயூர் விஹார் -3 ஐ தளமாகக் கொண்ட சிஆர்பிஎஃப் பட்டாலியனில் 122 ஜவான்கள் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 100 பேருக்கான சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
  • நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் தொற்று பரவல் சிக்கிம் தவிர மற்ற பகுதிகளில் இல்லை. இவை பச்சை மண்டலங்களாக உள்ளன. இந்த நிலையில், இந்த பச்சை மண்டலங்களை கொண்டுள்ள மாநிலங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு முன் அனுமதி பெற தேவையில்லை என்றும், மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும்போது எல்லைகளில் தொற்று சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
  • தொற்று நோயின் பாதுகாப்பு தேவைக்காக 2.22 கோடி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) பெற ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 1.43 கோடி உபகரணங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் என பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • சர்வதேச அளவில் இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளின் வல்லரசு என சொல்லப்படும் அமெரிக்கா தொற்று நோயை தடுப்பதில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. இந்நாட்டில் 66 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,435 பேர் உயிரிழந்துள்ளனர்.

.