This Article is From Oct 26, 2019

ஹரியானாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக: துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி!!

Haryana elections results: பாஜக அதிகபட்சமாக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜேஜேபி எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது.

ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது (PTI)

New Delhi:

ஹரியானாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்த நிலையில், துஸ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றைய தினம் அறிவித்துள்ளார். 

ஹரியானா மாநில தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைய உதவ வேண்டிய நிலையில் கிங் மேக்கராக, துஸ்யந்த் சவுதாலா திகழ்கிறார். அவர் காங்கிரஸ் அல்லது பாஜகவில் யாருக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதை பொருத்தே ஹரியானா அரசியலில் அடுத்த நகர்வு அமையும். 

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக அதிகபட்சமாக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜேஜேபி எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. 

இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக ஜனநாயக ஜனதா கட்சி உருவெடுத்துள்ளதால் துஷ்யந்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைப்பதற்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வந்தன. 

இந்நிலையில் கடந்த தேர்தலில் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது பெரும்பான்மையை பெறத் தவறியதை அடுத்து ஹரியானா மாநில பாஜக தலைவர் பொறுப்பை சுபாஷ் பராலா ராஜினாமா செய்தார்.

இதனிடையே கர்நாடகா பாணியில் ஹரியானாவில் முதல்வர் பதவியை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு விட்டுக்கொடுத்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நேற்றைய தினம் துஸ்யந்த் சவுதாலா கூறும்போது, நாங்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆட்சி அமைவது ஜேஜேக கட்சி கையிலே உள்ளது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு ஹரியானா முதல்வர் மனோகர் லால் மற்றும் துயஷ்ந்த் சவுதாலா உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களின் தீர்ப்பை மனதில் வைத்து, பாஜகவும், ஜேஜேபியும் கூட்டணி அமைத்து ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் என இரு கட்சி தலைவர்களும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். 

ஹரியானாவில் 40 இடங்களைக் கைப்பற்றிய பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தும், பெரும்பான்மைக்கு ஆறு எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டது.  இதைத்தொடர்ந்து, 8 சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறுவதில் பாஜக கவனம் செலுத்தியது. எனினும், அவர்களில் கோபால் காந்தா என்ற மிகவும் சர்ச்சைக்குரிய சுயேட்சை எம்.எல்.ஏ.,வும் ஒருவர் ஆவார்.

கோபால் காந்தா மீது கிரிமினல் மற்றும் 2012 ஆம் ஆண்டில் தனது விமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது இருந்து வந்ததால், சுயேட்சைகளின் ஆதரவை கோரும் முடிவை பாஜக கைவிட்டது. 

பின்னர், இறுதியாக துஷயந்த் சவுதாலாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்த பாஜக, நேற்றைய தினம் அமித்ஷா இல்லத்தில் சவுதாலாவுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து, முடிவில் கூட்டணி அமைக்கப்பட்டதாக இந்த அறிவிப்பு வெளியானது. 

.