This Article is From Mar 28, 2019

சுந்தர் பிச்சையை பாராட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!! காரணம் தெரியுமா?

சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த ட்ரம்ப் சீனாவில் கூகுள் மேற்கொண்டு வரும் வர்த்தக நடவடிக்கைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவியாக இருக்கிறது என்று கூறி சுந்தர் பிச்சையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

சுந்தர் பிச்சையை பாராட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!! காரணம் தெரியுமா?

ட்ரம்ப் - சுந்தர் பிச்சை சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூகுள் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • சுந்தர் பிச்சையை சந்தித்தது தொடர்பாக ட்ரம்ப் ட்விட் செய்துள்ளார்
  • சுந்தர் பிச்சையை பாராட்டியுள்ளார் ட்ரம்ப்
  • ட்ரம்ப் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது என்கிறது கூகுள்.
Washington:

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையால் அமெரிக்க ராணுவத்திற்கு பலம் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். முன்பு அவரும், கூகுள் நிறுவனமும் சீன ராணுவத்திற்கு உதவி செய்வதாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது ட்ரம்ப் பாராட்டியுள்ளார். 

உலகின் முதன்மை தேடுதளமான கூகுளில் தலைமை செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். அவரை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இந்த சந்திப்புக்கு பின்னர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், ''இப்போதுதான் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை சந்தித் பேசினேன். அவர் மிகவும் சிறந்த நபராக உள்ளார். சீன ராணுவத்திற்கு அல்லாமல், அமெரிக்க ராணுவத்திற்கு சுந்தர் பிச்சை பக்க பலமாக இருக்கிறார்.'' என்று கூறியுள்ளார். 

இந்த மாத தொடக்கத்தில் கூகுள் குறித்து விமர்சித்த ட்ரம்ப் அந்த நிறுவனம் சீனாவில் மேற்கொள்ளும் வர்த்தகத்தால் சீன ராணுவம் ஆதாயம் அடைவதாக விமர்சித்திருந்தார். இதேபோன்று அமெரிக்க ராணுவ உயர் அதிகாரியான ஜோசப் டன்ஃபோர்டும், 'சீனாவில் கூகுள் மேற்கொள்ளும் வர்த்தகம் மறைமுகாக சீன ராணுவத்திற்கு உதவியாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.

இதனால் கூகுள் நிறுவனத்திற்கும், அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இதன்பின்னர்தான் ட்ரம்ப் - சுந்தர் பிச்சை சந்திப்பு நடந்திருக்கிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.