This Article is From Apr 30, 2020

“இந்திய சினிமாவுக்கு மிக மோசமான வாரம்”- ரிஷி கபூரின் மறைவால் துக்கத்தில் வாடும் இந்தியா!

Rishi Kapoor's death: கபூரின் மறைவைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், “என் இதயம் நொறுங்கிவிட்டது. என் ஆருயிர் நண்பனான ரிஷி கபூர், ரெஸ்ட் இன் பீஸ்,” என வருத்தப்பட்டுள்ளார். 

“இந்திய சினிமாவுக்கு மிக மோசமான வாரம்”- ரிஷி கபூரின் மறைவால் துக்கத்தில் வாடும் இந்தியா!

புற்று நோய்க்கு எதிராக போராடி வந்த ரிஷி கபூருக்கு நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

ஹைலைட்ஸ்

  • புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார் ரிஷி கபூர்
  • அமெரிக்காவில் புற்று நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தார் ரிஷி கபூர்
  • சென்ற ஆண்டு சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் ரிஷி கபூர்
New Delhi:

முதுபெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 67 வயதில் காலமானார். மும்பையில் வசித்து வந்த அவர் நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமானார். இப்படிப்பட்ட சூழலில் ரிஷி கபூரின் மறைவுச் செய்தி பாலிவுட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிஷி கபூரின் மறைவைத் தொடர்ந்து பல பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

அவரது நீண்ட நாள் நண்பரான அமிதாப் பச்சன், “அவன் சென்றுவிட்டான். ரஷி கபூர் மறைந்துவிட்டான். நான் தகர்ந்துவிட்டேன்,” என்று உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

புற்று நோய்க்கு எதிராக போராடி வந்த ரிஷி கபூருக்கு நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை அவரது குடும்பத்தினர், கபூரை மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும், இன்று இயற்கை எய்தியுள்ளார். 

கபூரின் மறைவைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், “என் இதயம் நொறுங்கிவிட்டது. என் ஆருயிர் நண்பனான ரிஷி கபூர், ரெஸ்ட் இன் பீஸ்,” என வருத்தப்பட்டுள்ளார். 

காங்கிரஸின் ராகுல் காந்தி, “இது இந்திய சினிமாவுக்கு மிக மோசமான வாரம். இந்திய சினிமாவின் இன்னொரு லெஜெண்டு நடிகர் ரஷி கபூரும் இறந்துவிட்டார். பல தலைமுறையினரும் அவரது ரசிகர்களாக இருக்கின்றனர். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் கூறியுள்ளார். 

‘பாபி', ‘சாந்தினி' போன்ற பாலிவுட் படங்களுக்காக மிகவும் பிரபலமானவர் ரிஷி கபூர். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அவர் சிகிச்சை முடிந்து மும்பைக்குத் திரும்பினார். இந்தியா வந்த பிறகு அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன்! 11 மாதங்கள், 11 நாட்கள்! எல்லோருக்கும் நன்றி,” எனத் தெரிவித்திருந்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் இரண்டு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு கபூர், “பிரியமுள்ள குடும்பமே, நண்பர்களே, எதிரிகளே மற்றும் பின் தொடர்பவர்களே. என் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவலைப்பட்டது நெகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. கடந்த 18 நாட்களாக நான் டெல்லியில் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தேன். இங்குள்ள கடும் மாசுவினால் எனக்குத் தொற்று ஏற்பட்டது. அதனால்தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்,” என்று தகவல் கொடுத்தார். 
 

ரிஷி கபூருக்கு நீத்து கபூர் என்னும் மனைவி இருக்கிறார். மேலும் அவருக்கு மகன் ரன்பீர் மற்றும் மகள் ரித்திமா உள்ளனர். கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தி பாடி' மற்றும் ‘ஜூந்தா கஹின் கா' என்னும் படங்களில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் வெளியான ‘தி இன்டெர்ன்' படத்தின் இந்தி ரீமேக்கில் ரிஷி கபூர் நடிக்கவிருந்தார். அவருடன் தீபிகா படுகோன் நடிக்க ஆயத்தமாகியிருந்தார். 

ரிஷி கபூருக்கு பல பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

.