This Article is From May 20, 2020

நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: தினகரன்

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: தினகரன்

நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: தினகரன்

ஹைலைட்ஸ்

  • நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்
  • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12,448ஆக அதிகரித்துள்ளது

நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. இதில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 42,297ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,303 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12,448ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் மொத்தம் 7,672 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, தமிழகத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, கொரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொதுமுடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

.