This Article is From Jun 28, 2018

‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது!’- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகவும், இனி அது திறக்கப்படாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது!’- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

ஹைலைட்ஸ்

  • ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது, அமைச்சர் ஜெயக்குமார்
  • மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது
  • ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
Chennai:

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகவும், இனி அது திறக்கப்படாது என்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக ட்வீட் செய்தனர்.

ராம்தேவ், ‘தென்னிந்தியாவில் வேதாந்தாவுக்கு சொந்தமாக இருக்கும் ஒரு ஆலையில் சர்வதேச கிளர்ச்சியாளர்கள், அப்பாவி உள்ளூர் மக்களை வைத்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர். தொழிற்சாலைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்காக இருக்கும் கோயில் போன்றவை. அவை மூடப்படக் கூடாது’ என்று ட்வீட் செய்தார்.

ஜக்கி வாசுதேவ், ‘காப்பர் உற்பத்தி குறித்து கருத்து சொல்ல நான் வல்லுநர் கிடையாது. ஆனால், இந்தியாவுக்கு அதிக அளவிலான காப்பர் தேவை இருக்கிறது. நாம் இந்தியாவில் காப்பரைத் தயாரிக்கவில்லை என்றால், கண்டிப்பாக சீனாவிலிருந்து தான் அதை வாங்கப் போகிறோம். சுற்றுச்சூழலுக்கு எதிரான வரம்பு மீறல்களை சட்டபூர்வமாக எதிர்கொண்டு விடலாம். மிகப் பெரும் நிறுவனங்களை மூடுவது என்பது பொருளாதார தற்கொலை’ என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது. அது குறித்து ஒரு ஸ்திரமான முடிவை தமிழக எடுத்துவிட்டது. ராம்தேவ் கருத்து பற்றியோ சத்குரு கருத்து பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது’ என்றுள்ளார் உறுதியுடன்.

.