This Article is From Jul 23, 2020

இறுதியாண்டு தேர்வு தவிர்த்து அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வும் ரத்து: முதல்வர் அறிவிப்பு

இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இறுதியாண்டு தேர்வு தவிர்த்து அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வும் ரத்து: முதல்வர் அறிவிப்பு

இறுதியாண்டு தேர்வு தவிர்த்து அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வும் ரத்து: முதல்வர் அறிவிப்பு

ஹைலைட்ஸ்

  • இறுதியாண்டு தேர்வு தவிர்த்து அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து
  • எம்‌.சி.ஏ. முதலாம்‌ மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு மாணவர்களுக்கும் விலக்கு
  • இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடக்கலாம்

கல்லூரி இறுதியாண்டு தேர்வு தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வருகிறது. இதன் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நடத்த முடியாமல் தள்ளிப்போனது. 

தொடர்ந்து, ஜூன் மாதத்தில் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அரசு தீவிரம் காட்டி வந்தது. இதற்காக இரண்டு முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து, கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி, கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வந்ததனர். இந்நிலையில், கல்லூரி இறுதியாண்டு தேர்வு தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில்‌ உள்ள கலை மற்றும்‌ அறிவியல்‌ பட்டப்படிப்பு பயிலும்‌ மாணாக்கர்கள்‌, பொறியியல்‌ பட்டப்படிப்பு மற்றும்‌ பலவகை தொழில்‌ நுட்பப்‌பட்டயப்‌ படிப்பு பயிலும்‌ மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில்‌ பருவத்‌ தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்‌ குழு ஒன்று தமிழ்நாடு அரசால்‌ அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ்‌ தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.

மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி, பல்கலைக்கழக மானியக்‌ குழு மற்றும்‌ அகில இந்திய தொழில்‌ நுட்பக்‌ கல்விக்‌ குழு ஆகியவற்றின்‌ வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள்‌ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, முதலாம்‌ மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு கலை மற்றும்‌ அறிவியல்‌ இளங்கலை பட்டப்படிப்பில்‌ பயிலும்‌ மாணாக்கர்களுக்கும்‌ மற்றும்‌ பலவகை தொழில்‌நுட்பப்‌ பட்டயப்‌ படிப்பு பயிலும்‌ மாணாக்கர்களுக்கும்‌, முதுகலைப்‌ பட்டப்படிப்பில்‌ முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணாக்கர்களுக்கும்‌, இளநிலை பொறியியல்‌ பட்டப்படிப்பில்‌ முதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணாக்கர்களுக்கும்‌

முதுநிலை பொறியியல்‌ பட்டப்படிப்பில்‌ முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணாக்கர்களுக்கும்‌, அதேபோன்று, எம்‌.சி.ஏ. முதலாம்‌ மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணாக்கர்களுக்கும்‌ இந்தப்‌ பருவத்திற்கு மட்டும்‌ தேர்வில்‌ இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச்‌ செல்ல அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

.