This Article is From May 29, 2019

ராகுல் மீதான நம்பிக்கையிலே தென்னிந்திய மக்கள் வாக்களித்துள்ளனர்: ஜெயக்குமார்

ராகுல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், திருவள்ளுர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராகுல் மீதான நம்பிக்கையிலே தென்னிந்திய மக்கள் வாக்களித்துள்ளனர்: ஜெயக்குமார்

தென்னிந்தியாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது என்பது ராகுல் காந்தி மீதான நம்பிக்கையின் ஒரு சான்றாகும். அதனால், ராகுல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், திருவள்ளுர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது, பிரதமர் பதவிக்கு ராகுலின் பெயர் அறிவிக்கப்படாத சமயத்திலே, எங்கள் கூட்டணி கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொண்டார். மக்களும் எங்களை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் ராகுலை பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், வடமாநிலங்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் நாங்கள் தற்போது தான் ஆட்சி அமைத்தோம். ஆனால், ஒரு சில மாதங்களிலே மக்களின் மனநிலை எப்படி மாறியது என்பது தெரியவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து, ராகுலின் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற சூழ்நிலையை தென்பகுதியில் இருந்து நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததன் மூலம், மக்கள் காங்கிரஸையும், ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டதை காட்டியுள்ளனர்.

சில மாநிலங்களில் செயல்திறன் நன்றாக இல்லாத காரணத்தால் எங்களது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று நாங்கள் மக்கள் முன்பு போய் நிற்க முடியாது. இதனால், நாங்கள் இன்று ராகுல் தலைவராக நீடித்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, ராகுலை நேரில் சந்திக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம், தெற்கிலிருந்து அதிகளவிலான காங்கிரஸ் எம்.பிக்கள் உருவாகியுள்ளது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று எழுப்பிய கேள்விக்கு, நிச்சயம்.. காங்கிரஸ் தென்பகுதிகளில் பலமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இது கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது அவர், தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால் மக்களின் மனதை வென்றுள்ளீர்கள். எனவே தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

.