This Article is From Sep 11, 2020

மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்திய சீரம்!

மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள  நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சீரம் நிறுவனம் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனையை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

New Delhi:

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனமான சீரம் நிறுவனம் பரிசோதனைகளை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.78 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் பல சர்வதேச நிறுவனங்கள் தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சார்ப்பில் இங்கிலாந்தில் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனையில், தடுப்பூசி பெறப்பட்ட தன்னார்வலருக்கு ஏற்பட்ட மோசமான பக்கவிளைவுகள் காரணமாக நான்கு நாடுகளில் இந்த பல்கலைக்கழகம் ஆய்வினை தற்போது நிறுத்தியுள்ளது.

இந்தியாவில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தின் மூலமாக கொவிஷீல்ட்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் பரிசோதித்து வருகின்றது. இந்நிலையில், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து இந்நிறுவனம் பரிசோதனையை இடைநிறுத்தியுள்ளது.

மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள  நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் பரிசோதனையை மறுத்தொடக்கம் செய்யும் வரையில் தாங்கள் பரிசோதனையை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மேலும், சூழலை நன்கு பரிசீலித்து வருவதாகவும் சீரம் தெரிவித்துள்ளது.

.