This Article is From Aug 19, 2020

“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!

"ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது"

“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!

"நீண்ட தொலைவுக்குச் சென்று உணவு வழங்குவதற்கான ஊக்கத்தொகையும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது"

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, சமீக காலமாக தங்கள் ஊழியர்களுக்கு அளித்து வரும் ஊதியத்தைப் பெருமளவுக் குறைத்துள்ளது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழையபடி ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் சமீபத்தில் போராடத்தில் குதித்தனர். 

இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான், “சென்னையில் இணையவழி வணிகம் மூலம் உணவு வழங்கும் தனியார் நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) தொடக்கத்தில் தனது ஊழியர்களுக்கு நேர்மையான முறையில் ஊதியத்தையும், ஊக்கத்தொகையையும் அளித்து வந்தது. ஆனால் தற்போது குறைந்தளவு தொலைவில் உள்ள இடங்களுக்கு உணவு கொண்டு வழங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை 40 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகக் குறைத்துள்ளது. இது தவிர நீண்ட தொலைவுக்குச் சென்று உணவு வழங்குவதற்கான ஊக்கத்தொகையும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது.

நாளொன்றுக்கு ஒரு ஊழியர் அதிகப்பட்சமாக 25 முறை உணவு வழங்கும் வாய்ப்புகளையும், ஒரு உணவு வழங்கலுக்கு 40 ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் நாளொன்றுக்கு ரூ.1,000 வரை வருமானமாகக் கிடைத்தது. கூடுதலாகக் கிடைக்கும் ஊக்கத்தொகை அவர்களுடைய உணவு மற்றும் எரிபொருள் தேவையை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது ஒருமுறை உணவு வழங்க ரூ.15 எனவும் அதிகப்பட்சம் 20 முறை மட்டுமே வாய்ப்பும் வழங்கப்படுவதால் நாளொன்றுக்கு ரூ.300 வரை மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. இணையவழி உணவு வழங்கல் நிறுவனங்கள் உணவகங்களின் உண்மையான விற்பனை விலையை விட 30% வரை கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கின்றன. மேலும் உணவு வழங்கல் கட்டணமாகத் தொலைவைப் பொறுத்து ரூ.100 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்கள் உணவு வழங்கல் ஊழியர்களுக்கு ஊதியத்தை மிகுதியாகக் குறைத்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முறையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண தொடர்புடைய நிறுவனம் முன்வரவில்லை என்றும் இதுதொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி ஊழியர்களின் ஊதியத்தைப் பாதிக்கும் மேலாகக் குறைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வறுமையில் வாடவிடும் இதுபோன்ற தனியார் பெரு நிறுவனங்கள் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் உடனடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகைச் செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். 


 

.