This Article is From Sep 20, 2020

சூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வு எதிராக பேசிய நடிகர் சூர்யாவைக் கண்டித்து கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு வேதனை தெரிவித்த நடிகர் சூர்யா, நீட் ஒரு மனுநீதித் தேர்வு என்று குற்றம்சாட்டினார். மேலும், நீதிமன்றத்தையும் விமர்சித்திருந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும்படி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தேவையில்லை என்று தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டார். 

இதனையடுத்து சூர்யாவை செருப்பால் அடித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தர்மன் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த பதற்றமான சூழலில், தற்போது கோவையில் நடிகர் சூர்யாவைக் கண்டித்து இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

இதுதொடர்பாக இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கூறுகையில், நீட் தேர்வுக்கு எதிராக சில அரசியல்வாதிகள் தவறாக பிரச்சாரம் செய்து, மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துவதாகவும், மாணவர்களின் தற்கொலைக்கு இத்தகைய அரசியல்வாதிகளே காரணமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், நடிகர் சூர்யா நீட் தேர்வை மனுநீதி தேர்வு, அநீதித் தேர்வு என்று தவறான பிரச்சாரத்தை முன்வைக்கிறார். இதுவும் மாணவர்களை துவண்டு விடச் செய்யும் விதமாக அமைகிறது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் நிர்வாக குழு உறுப்பினர் குணா, கோட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
 

.