This Article is From May 13, 2020

PM - CARES நிதியிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 3,100 கோடி ஒதுக்கீடு!

ரூ. 3,100 கோடியில் ரூ. 2,000 கோடி வென்ட்டிலேட்டர் வாங்குவதற்கும், ரூ. 1,000 கோடி வெளி மாநில தொழிலாளர்களின் நலனுக்காகவும், ரூ. 100 கோடி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கும் பயன்படுத்தப்படும்

PM - CARES நிதியிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 3,100 கோடி ஒதுக்கீடு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வெளி மாநில தொழிலாளர் பிரச்னை அதிகரித்துள்ளது.

New Delhi:

பிரதமர் மோடியின் அவசர காலத்திற்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியான PM - CARES நிதியில் இருந்து ரூ. 3,100 கோடி கொரோனா  தடுப்பு நடவடிக்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ஒதுக்கப்படும் ரூ. 3,100 கோடியில் ரூ. 2,000 கோடி வென்ட்டிலேட்டர் வாங்குவதற்கும், ரூ. 1,000 கோடி வெளி மாநில தொழிலாளர்களின் நலனுக்காகவும், ரூ. 100 கோடி தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கும் பயன்படுத்தப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. 

மார்ச் 27-ம்தேதி PM - CARED நிதி மத்திய அமைச்சரவையால் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை போன்று செயல்படும் இந்த அமைப்பிற்கு பிரதமர் மோடி தலைவராக இருப்பார். உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் செயல்படுவார்கள்.

இந்த அமைப்புக்கு தனி நபர், கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில்துறை குழுமங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து நிதி பெறப்படுகிறது. இந்த தொகைக்கு வரி கிடையாது. 

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, பி.எம். கேர்சுக்கு நிதி வழங்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்று பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்தனர். 

ஏற்கனவே பிரதமர் தேசிய நிவாரண நிதி கடந்த 1948-ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. அப்படியிருக்கையில் இந்த பி.எம். கேர்சுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இந்த அமைப்பால் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் தொகை குறைந்து போகும் என பல்வேறு மாநில அரசுகள் தங்களது கருத்தை பதிவு செய்திருந்தன.

இதேபோன்று பி.எம். கேர்ஸில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதற்கு வரும் நிதியை அரசு தணிக்கை செய்யாது என்றும், தனியார் ஆடிட்டர்கள் தணிக்கை செயவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.