This Article is From Jun 12, 2018

மதச்சார்பின்மை பற்றி பேசிய பிரபல எழுத்தாளர் வங்கதேசத்தில் சுட்டுக் கொலை!

வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் மதச்சார்பின்மை குறித்து தொடர்ந்து பேசிவந்த எழுத்தாளர் ஷாஜஹான் பச்சூ மர்ம நபர்களால் கொல்லப்பட்டு உள்ளார்

மதச்சார்பின்மை பற்றி பேசிய பிரபல எழுத்தாளர் வங்கதேசத்தில் சுட்டுக் கொலை!

ஷாஜகான் பச்சூ

ஹைலைட்ஸ்

  • கொல்லப்பட்ட எழுத்தாளரின் பெயர் ஷாஜகான் பச்சூ
  • அவரது சொந்த ஊரில் மர்மக் குழு, பச்சூவை சுட்டுக் கொன்றுள்ளது
  • அவர் மதச்சார்பின்மை குறித்து தொடர்ந்து பேசி வந்தார்
Dhaka: வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் மதச்சார்பின்மை குறித்து தொடர்ந்து பேசிவந்த எழுத்தாளர் ஷாஜஹான் பச்சூ மர்ம நபர்களால் கொல்லப்பட்டு உள்ளார். 

ஷாஜஹான் பச்சூ அவரது சொந்த ஊரான முன்ஷின்கஜ் மாவட்டத்தில் இருக்கும் கக்கல்டியில் இருக்கும் ஒரு மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதிக்கு இரண்டு பைக்குகளில் 5 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அப்போது மருந்துக் கடைக்கு முன்னர் ஒரு வெடிகுண்டுவை அந்த மர்மக் குழு வீசியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்திலிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர், ஷாஜஹான் பச்சூவை கடையிலிருந்து வெளியே இழுத்து வந்த மர்மக் குழு, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலைக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியவில்லை. போலீஸ் தரப்பும், ஷாஜஹான் பச்சூவின் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தக் கொலைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு யாராவது ஒருவர் தான் காரணமாக இருப்பர் என்று யூகிக்கப்படுகிறது. 

மதச்சார்பின்மை குறித்து வெளிப்படையாக பேசி வந்ததால், இதற்கு முன்னரும் ஷாஜஹான் பச்சூவுக்கு அடிப்படைவாதக் குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அவர், `பிஷாகா ப்ரோகாஷினி' என்ற புத்தக பதிப்பகத்தை நடத்தி வந்தார். இதன் மூலம் பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் ஷாஜஹான் பச்சூ. 60 வயதாகும் பச்சூ, முன்ஷின்கஜ் மாவட்டத்தின் வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்க தேசத்தில் மதச்சார்பின்மை குறித்து பேசி வரும் இணைய எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் பலரை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொலை செய்து வருகின்றனர் அடிப்படைவாதக் குழுக்கள். 

.