This Article is From Aug 29, 2019

தீவிரவாதிகளை எங்கள் நாட்டுக்குள் திணிப்பதை நிறுத்துங்கள்: பாக். (Pakistan) மீது சீறும் இந்திய அரசு!

“இந்தியாவின் உள் விவகாரத்துக்கு உட்பட்ட ஒரு விஷயம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்து கூறி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்”

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் தலைவர்கள் மிகவும் ‘பொறுப்பற்ற கருத்துகளை' சொல்லி வருவதாகவும், ஐ.நா-வுக்கு அது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்திற்கு எந்தவித மதிப்பும் இல்லை என்றும் சாடியுள்ளது இந்திய அரசு தரப்பு. குறிப்பாக ஐ.நா சபைக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் ஆகியோரின் கருத்துகளும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.

“இந்தியாவின் உள் விவகாரத்துக்கு உட்பட்ட ஒரு விஷயம் குறித்து பாகிஸ்தான் தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்து கூறி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார். 

ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலர், மிரட்டல்விடுக்கும் தொனியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவர், “பாகிஸ்தான் சாதாரண அண்டை நாடு போல நடந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக பேச வேண்டும். சாதாரணமாக வர்த்தகம் செய்ய வேண்டும். தீவிரவாதிகளைத் திணிப்பதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

அரசு தரப்பு வட்டாரங்கள், “பாகிஸ்தான் கமாண்டோஸ் எல்லைத் தாண்டி, குஜராத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது. கட்ச் பகுதி மூலம், கடல் மார்க்கமாக பாகிஸ்தான் கமாண்டோஸ் நுழைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் அமைதியைக் குலைக்கவோ அல்லது தீவிரவாத தாக்குதல் நடத்தவோ வாய்ப்புள்ளது” என்று தகவல் தெரிவித்துள்ளன. அது குறித்து பேசிய ரவீஷ் குமார், “அரசுக்கு அது குறித்து தகவல் வந்ததைத் தொடர்ந்துதான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார். 
 

.