This Article is From Feb 25, 2020

3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: டிரம்ப்

Donald trump India visit: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தது.

3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: டிரம்ப்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடி என்னை வரவேற்றது எனக்கு மிகப்பெரிய பெருமை - டிரம்ப்

3 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். இதில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது. 

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரதமர் மோடியும், டிரம்பும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, மொட்டேராவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பை டிரம்ப் பெற்றுள்ளார். டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். 

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு என்பது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவு கிடையாது, இது மக்களை மையமாகக் கொண்டது. மக்களுக்கும் மக்களுக்குமானது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

தொடர்ந்து, பேசிய ட்ரம்ப், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி என்னை வரவேற்றது எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்திய மக்கள் பிரதமர் மோடியை மிகவும் நேசிக்கின்றனர். நேற்று மைதானத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். ஒவ்வொரு முறையும் மோடியைப் பற்றிக் கூறும்போது அவர்கள் கரவொலி எழுப்பி என்னை ஊக்கப்படுத்தினர் என்றார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவும் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்களுடன் டிரம்பின் மகள் இவாங்கா அவரது கணவர் ஜாரட் குஷர் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். முதலில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பிரதமர் மோடி சுற்றிக் காட்டி விளக்கம் அளித்தார். 

அதைத்தொடர்ந்து, மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிரம்ப், மோடியைப் புகழ்ந்து பேசினார். பின்னர் மாலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். 

தொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

.