This Article is From Feb 29, 2020

டெல்லி கலவரம் 4 நாட்களுக்குத் தொடர காரணம் என்ன? திடுக் தகவல்!

யமுனா விஹார் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடப்பதாகவும், வாகனங்கள் தீவைக்கப்படுவதாகவும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் ஆய்வு செய்த போது, அவை அனைத்தும் வெற்றாக இருந்தது.

வன்முறை நடந்த பகுதிகளில் உள்ள 2 காவல் நிலையங்களில் அழைப்பு பதிவுகளை என்டிடிவி ஆய்வு செய்தது.

ஹைலைட்ஸ்

  • காவல் நிலையங்களில் அழைப்பு பதிவுகளை என்டிடிவி ஆய்வு செய்தது.
  • பெரும்பாலான புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • 4 நாட்களில் டெல்லி காவல்துறைக்கு 13,200 புகார் அழைப்புகள் வந்துள்ளன
New Delhi:

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் 4 நாட்களாக நடந்த கலவரத்தின் போது டெல்லி காவல்துறைக்கு 13,200 புகார் அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், இந்த புகார்கள் தொடர்பாகச் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்கள் நடவடிக்கைகள் எடுத்ததா என்பது பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது. 

கடந்த பிப்.23 முதல் 26ம் தேதி வரை 4 நாட்களாக நடந்த வன்முறையின் போது காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அறைக்கு வந்துள்ள புகார் அழைப்புகளின் விவரம் முழுமையாகக் கிடைத்துள்ளது. அதன்படி, 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 700 அழைப்புகள் வந்துள்ளன, 24ம் தேதி 3,500 அழைப்புகள் வந்துள்ளன, உட்சபட்சமாக 25ம் தேதி 7,500 அழைப்புகள் வந்துள்ளன, 26ம் தேதி 1,500 அழைப்புகள் வந்துள்ளன. இது அந்த நாட்களில் அதிகபட்சமாக நடந்த கலவரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. 

இந்நிலையில், வன்முறை நடந்த பகுதிகளில் உள்ள 2 காவல் நிலையங்களில் அழைப்பு பதிவுகளை என்டிடிவி ஆய்வு செய்தது. அதில் நமக்குக் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்.. 

வன்முறை நிகழ்ந்த யமுனா விஹார் பகுதிக்கு உட்பட்ட பஜன்புரா காவல்நிலையத்தில் பிப்.24 முதல் 26 வரை 3,000 - 3,500 அழைப்புகள் வந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த காவல்நிலையத்துக்கு வந்த அழைப்பு பதிவேட்டில் ஒரு எட்டு பக்கங்களை மட்டும் நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த பதிவேட்டில், என்ன புகார், புகார்கள் எப்போது வந்தது, அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடங்கியதாகும். 

இதில், யமுனா விஹார் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடப்பதாகவும், வாகனங்கள் தீவைக்கப்படுவதாகவும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. 

இந்த புகார்கள் அனைத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் வரிசையாக வெற்றாக இருந்தது. 

உதாரணமாக, 24ம் தேதி திங்கட்கிழமையன்று மாலை 6.57 மணிக்கு யமுனா விஹார் பகுதியிலிருந்து அழைத்த பெண் ஒருவர் அந்த பகுதியில் கலவரம் நடப்பதாகப் புகார் கூறுகிறார்.  

இந்த விவரங்கள் அனைத்தும் அந்த பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பதிவு செய்யப்பட வேண்டிய வரிசையில் எதுவும் பதிவு செய்யப்படாமல் வெற்றாக இருக்கிறது. 

அந்த பதிவேட்டில் இந்த ஒரு புகார் மட்டும் வெற்றாக இல்லை.. இதுபோல வந்த பெரும்பாலான புகார்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற வரிசையில் வெற்றாகவே இருக்கிறது.

s8ld5p3

டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

யமுனா விஹாரை சேர்ந்த பாஜக கவுன்சிலர் பிரமோத் குப்தா தொடர்ந்து, பலமுறை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. 

இதுதொடர்பாக அவர் கூறும்போது, காவல்துறையால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தால், இது நிச்சயம் நிகழ்ந்திருக்காது என்றார். 

ஷிவ் விஹார் பகுதியின் அருகே உள்ள ராஜ்தானி பள்ளி வன்முறையாளர்கள் கட்டுப்பாட்டில் 60 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் உரிமையாளர் பைசல் ஃபாரூக் கூறும்போது, தான் தொடர்ந்து, காவல்துறைக்கு அழைப்பு விடுத்ததாகவும், வருகிறோம் என்று கூறிக்கொண்டே இருந்த காவலர்கள், இறுதிவரை வரவேயில்லை என்கிறார். 

காவல் நிலையத்திற்கு வந்த இந்த புகார் தொடர்பாகப் பதிவேட்டை ஆய்வு செய்தபோது, திங்கட்கிழமையன்று பிற்பகல் 3.54 மணிக்கு 2 அழைப்புகள் பள்ளி தாக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தொடர்பான வரிசையில், புகார் நிலுவையில் உள்ளது என்று உள்ளது. 

இதுபோன்ற பல்வேறு புகார்களும் அந்த பதிவேட்டில் நிலுவையில் உள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 

.