மகாராஷ்டிரா : அஜித் பவாருக்கு நிதி, அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டதாக தகவல்

மகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான நீர்ப்பாசனத்துறை ஜெயந்த் படேலுக்கும், வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கும் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

மகாராஷ்டிர அமைச்சரவையில் துணை முதல்வராக பொறுப்பில் இருக்கும் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதேபோன்று உள்துறை அமைச்சகப் பொறுப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் நவாப் மாலிக்கிற்கு ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தான் முயற்சிகளை தொடங்கினார். அதனை வெற்றிகரமாக செய்து முடித்ததும் அவர்தான். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் முக்கிய துறைகள் அவரது கட்சிக்கு செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மாநிலத்தின் முக்கிய பொறுப்பாக கருதப்படும் நீர்ப்பாசனத்துறை, ஜெயந்த் படேலுக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. வீட்டு வசதித்துறை ஜிதேந்திரா அவாதுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறையும், பாலாசாஹேம் தோரட்டுக்கு வருவாய்த்துறையும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற 36 பேரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேரும் அடங்குவார்கள். 

கடந்த நவம்பர் 28-ம்தேதி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினம், அவருடன் காங்கிரசை சேர்ந்த தோரட், நிதின் ராவத், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல், சாகன் பூஜ்பால் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 

துணை முதல்வர் அஜித் பவார் உள்பட மொத்தம் 36 பேர் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். உத்தவின் மகன் ஆதித்யா, கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்பு பாஜகவுடன் சேர்ந்து அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் உதவினார். அப்போது அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தன் பக்கம் இருப்பார்கள் என்று எண்ணிய அஜித்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, தனது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சரத் பவார் பக்கம் சென்றார். 

3 நாட்களுக்கு பின்னர் மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிவசேனா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, 80 மணிநேரமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக அரசு கவிழ்ந்தது. 

அஜித் பவார் விவகாரத்தில் சரத் பவார் காங்கிரஸ் கட்சியை விமர்சித்திருந்தார். காங்கிரஸ் அதிக அமைச்சர்களை கேட்டதால் அஜித் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர், அஜித் தான் எடுத்தது தவறான முடிவு என்பதை உணர்ந்து மீண்டும் சரத் பவார் பக்கம் சென்றிருக்கிறார்.