அரசு வேலைவாய்ப்புகளுக்கு தடையில்லை.. மத்திய அரசு விளக்கம்

செலவின கட்டுபாடுகளால் அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு எந்த பாதிப்பும், தடையும் வராது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அரசு வேலைவாய்ப்புகளுக்கு தடையில்லை.. மத்திய அரசு விளக்கம்
New Delhi:

அரசுத்துறைகளில் செலவினங்களைக் குறைப்பதற்கு மத்திய நிதியமைச்சகம் அண்மையில் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ள நிலையில், இதனால் அரசு வேலைவாய்ப்புகள், பணி நியமனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று விளக்கம் அளித்துள்ளது. 

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினங்களுக்கான துறையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியானது. அதில், தேவையற்ற செலவினங்களைக் குறைக்குமாறு அரசு துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக இனி அரசு துறைகளில் காலாண்டர், டைரிகள், ஆவணங்கள் போன்றவை அச்சிடக்கூடாது. டிஜிட்டல் மயமாகும் உலகில், இனி காகிதங்களுக்கான செலவினங்களையும் குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 

இதே போல் அரசு விழாக்கள், கொண்டாட்டங்களை அநாவசிய செலவுகள் இல்லாமல் நடத்த வேண்டும் என்றும், அதற்கும் உரிய அனுமதி பெற்றப் பிறகே நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனிடையே செலவினங்களைக் குறைப்பதற்காக இனி பணி நியமனங்களும் நடைபெறாது, வேலைவாய்ப்புகள் இருக்காது என்று எதிர்கட்சிகள் உட்பட பலரும் கருத்துத் தெரிவித்தனர். 

இந்த நிலையில், செலவின கட்டுபாடுகளால் அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு எந்த பாதிப்பும், தடையும் வராது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக செலவினத்துறை தரப்பில் வெளியிட்ட டுவிட்டரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் இதனால் அரசு வேலைவாய்ப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே வேலைவாய்ப்புகளுக்கான ஆர்ஆர்பி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் வழக்கம் போல் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமனம் வழங்கப்படும். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Newsbeep