This Article is From Jul 03, 2019

மகாராஷ்டிராவில் கனமழையால் அணை உடைந்து 6 பேர் உயிரிழப்பு! 18 பேர் மாயம்!

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அரசாங்க அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட கூடுதல் மீட்புக் குழுக்களும் விரைந்து பணியாற்றி வருகின்றன.

ஹைலைட்ஸ்

  • கனமழையால் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை உடைந்தது.
  • 7 கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது, 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
  • தேசிய பேரிடர் படை மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Mumbai:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை நேற்றிரவு திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதில் அணைக்கு அருகில் இருந்த 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

மும்பையில் இருந்து 275 கிமீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்திற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர், அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசாங்க அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட கூடுதல் மீட்புக் குழுக்களும் விரைந்து பணியாற்றி வருகின்றன.

மகாராஷ்டிராவில், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த, நான்கு நாட்களாக தொடர்ந்து, பெய்து வரும் கனமழையால், தலைநகர் மும்பை, வெள்ளத்தில் முடங்கியுள்ளது. ரயில், பஸ், விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் கனமழையால் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளதால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

hu351tpg

தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. மும்பை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் ஆக்ரோஷத்துடன் வெளியேறியது.

இதனால், அணைக்கு அருகில் உள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களைக் காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுதவிர அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மீட்புப் படையினரும் சென்றுள்ளனர்.

இதுவரை 6 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 18 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும், 300 முதல் 400 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் மழையாகும்.

மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மழையால் பல ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நேற்று அதிகாலை கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகினர். மற்றும் 13 காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.

With inputs from ANI, IANS

.