This Article is From Nov 28, 2019

மகாராஷ்டிராவில் இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே! - பிரதமர் மோடிக்கு அழைப்பு!

மகாராஷ்டிராவில் 20 வருடங்களுக்கு பின்னர் சிவசேனா தற்போது ஆட்சியை பிடிக்கிறது. அந்தவகையில், சிவசேனாவின் மூன்றாவது முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்.

உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில், மும்பை முழுவதும் தாக்கரே சர்க்கார் போஸ்டர்கள்.

Mumbai:

மகாராஷ்டிராவின் சிவாஜி பூங்காவில் இன்று மாலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது. 

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதில், மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

உத்தவ் தாக்கரேவுடன், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள், என்று கூறப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் 20 வருடங்களுக்கு பின்னர் சிவசேனா தற்போது ஆட்சியை பிடிக்கிறது. அந்தவகையில், சிவசேனாவின் மூன்றாவது முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். தாக்கரே குடும்பத்தில் இருந்து அரசு அதிகாரத்திற்கு வரும் முதல் நபர் உத்தவ் தாக்கரே ஆவார். 

உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளதை தொடர்ந்து, சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தங்கள் அதிகாரப்பகிர்வை இறுதி செய்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் படேல் கூறும்போது, தேசியவாத காங்கிரஸூக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது என்றும் சபாநாயகர் பதவி காங்கிரஸூக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், எத்தனை அமைச்சர்கள் பதவியேறக்கிறர்கள் என்பது ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். ஒவ்வொரு கட்சியை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று அவர் கூறினார். 

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு டெல்லியில் நேரில் சென்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

இதேபோல், இந்த விழாவில் பங்கேற்கும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு தாதர் சிவாஜி பூங்காவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

.