சென்னையில் பபாசி அமைப்பு நடத்தும் 43வது புத்தகக் கண்காட்சி, தேனாம்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய, மாநில அரசுகளை வகைதொகை இல்லாமல் கடுமையாக விமர்சித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், புத்தகக் கண்காட்சியில் அரங்கு வைத்திருந்த ‘மக்கள் செய்தி மையம்' என்கின்ற நிறுவனத்துக்கு பபாசி, ‘அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக புத்தகம் விற்கிறீர்கள். அதனால் அரங்கை உடனடியாக காலி செய்யவும்' என்று திடீர் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ச்சியாக மக்கள் செய்தி மையத்தின் உரிமையாளரான அன்பழகனையும் பல பிரிவுகளுக்குக் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். இது புத்தக பதிப்பாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
புத்தகக் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, தினமும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்காட்சி அரங்குக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் சிறப்புரை ஆற்றுவார்கள். நேற்று, ‘கீழடி ஈரடி' என்கிற தலைப்பின் கீழ் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உரையாற்ற இருந்தார்.
ஆனால் அவரோ, “இன்று நான் இங்கு உரையாற்றப் போவதில்லை. தமிழக பதிப்புத் துறைக்கு என தனித்த மாண்புகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருக்கிறது. அதை பபாசியும் பின்பற்ற வேண்டும். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டும்தான் நாம் செயல்பட வேண்டுமே தவிர, யாருடைய அழுத்தத்துக்கு அடிபணிந்து செயலாற்றக் கூடாது. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தாக காவல்துறை கூறலாம், அரசு கூறலாம். ஆனால் பபாசி கூறக் கூடாது.
விமர்சிப்பது தவறென்றால் இந்த கண்காட்சியில் மகாத்மா காந்தி எழுதிய புத்தகங்கள் இருக்கக் கூடாது. அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் இருக்கவே கூடாது. அண்ணாவின் ஒரு எழுத்தைக் கூட இங்கே வைக்க முடியாது.
அவ்வளவு ஏன், சமையல் குறிப்புப் புத்தகத்தைக்கூட விற்க முடியாது. ஏனென்றால் அதில் வெங்காயம் பற்றிய குறிப்பு இருக்கும். அது மத்திய அரசுக்கு எதிரானது. உப்பு பற்றிய குறிப்பு இருக்கும். அது மாநில அரசுக்கு எதிரானது என்று சிலர் சொல்லலாம். வெங்காயத்தை எழுதக்கூடாது, உப்பைப் பற்றி பேசக்கூடாது.
அவ்வளவு ஏன், கீழடி என்பது மத்திய அரசுக்கு எதிரானதுதான். ஏனென்றால், கீழடியை மத்திய அரசு தனக்கு எதிராகப் பார்க்கிறது. ஆனால், இந்த கண்காட்சியில் அது குறித்த ஒரு அரங்கு இருக்கிறது. அது அரசுக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லி நீக்கிவிட முடியுமா. எனவே பபாசியின் நடவடிக்கையை கண்டித்து எனக்களித்த கீழடி ஈரடி தலைப்பில் உரையாற்ற மறுத்து என் கண்டனத்தை தெரிவித்து அமர்கிறேன்,” என உரையை முடித்துக் கொண்டார் வெங்கடேசன்.