This Article is From Feb 03, 2019

ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி! - ராகுல் வாக்குறுதி

விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்ததன் மூலம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றி பெற்றது

ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி! - ராகுல் வாக்குறுதி

பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

ஹைலைட்ஸ்

  • ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் உறுதி
  • நாடுமுழுவதும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் அறிவிப்பு
  • காங்கிரஸ் தொடர்ந்து மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறது.
Patna:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதிசெய்யப்படும் என ஏற்கனவே ராகுல் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்ததன் மூலம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாட்னாவில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயி கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசுகள் பதவியேற்ற 10 நாளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

பீகார் விவசாயிகளை மோடி மிகவும் இழிவுபடுத்தியுள்ளார். விவாசியகளை இழிவுபடுத்தினால் அவர்கள் உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள், விவசாயிகள் தங்களுக்கு பாஜக வேண்டாம் என்றும் காங்கிரஸே வேண்டும் என்கிறனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆண்டுதோறும் 2 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் தேர்தலில் தந்த வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றவில்லை. மோடி கூறிய நல்ல காலம் எங்கே? ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பெரிய மோசடி. பொது மக்களின் பணத்தை மல்லையாவிற்கும், நிரவ் மோடிக்கும் தான் கொடுத்தார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களில், ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி காங்கிரஸால் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸின் விவசாயக் கடன் தள்ளுபடியை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, 10 ஆண்டுகளுக்கு முன் 2008-09ம் ஆண்டு விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடியாக ரூ.6 லட்சம் கோடியை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தார்கள்.

ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே கடன் தள்ளுபடி செய்து, விவசாயிகளை ஏமாற்றினார்கள். தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக மட்டுமே விவசாயக் கடன் தள்ளுபடியென காங்கிரஸ் வாக்குறுதியளிக்கிறது என கடுமையாக விமர்சித்தார்.

.