This Article is From Aug 07, 2018

'கலைஞர் மறைவு இந்தியாவுக்கு இழப்பு!'- ராகுல் காந்தி உருக்கம்

தி.மு.க தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார்

'கலைஞர் மறைவு இந்தியாவுக்கு இழப்பு!'- ராகுல் காந்தி உருக்கம்
New Delhi:

தி.மு.க தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வந்தவரின் இறுதி மூச்சு இன்று நின்றது. இந்நிலையில், அவருக்கு ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 -ம் நாளான நேற்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) மாலை கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உள் உறுப்புகளை சகஜ நிலையில் வைத்திருப்பதுதான் சவாலாக இருக்கிறது என்றும், 24 மணி நேரம் பொறுத்துதான் எதுவும் செல்ல முடியும் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையை அடுத்து இரவு முதலே, காவேரி மருத்துவமனையில் தி.மு.க தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே இருந்து, கருணாநிதியின் உடல் நலம் பெற வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஆனால், அவர்கள் வேண்டுதல்களை பொய்யாக்கி விட்டு இன்று மாலை காலமானார் கலைஞர் கருணாநிதி. மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து முயற்சிகளையும் எடுத்த போதும், அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது இறப்பு குறித்து ட்விட்டரில் ராகுல், ‘கலைஞர் கருணாநிதி 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தவர். தமிழர்களால் விரும்பப்பட்டவர். அவரது மறைவால் இந்தியா அதன் ஒப்பற்ற பிள்ளையை இழந்துள்ளது. அவரது குடும்பத்தாருக்கும், அவரது பிரிவால் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று பதிவிட்டுள்ளார்.

.