This Article is From Jul 29, 2019

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது எடியூரப்பா அரசு!

சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது எடியூரப்பா அரசு!

எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

Bengaluru:

கர்நாடகா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றார். 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 22-ந் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரி காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

அதை பரிசீலித்த சபாநாயகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி, சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் கடந்த 25-ந் தேதி தகுதி நீக்கம் செய்தார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கர்நாடகத்தில் புதிய அரசு அமைக்க பாஜக முன்வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா 26-ந் தேதி முதல்வராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார். 

கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 224. இவர்களில் 17 பேர் தகுதிநீக்கம்  செய்யப்பட்டுவிட்டதால், தற்போது சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 207.

இதில், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு குறைந்தபட்சம் 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதன்படி, கர்நாடகாவில், இன்று காலை கூடிய சட்டப்பேரவையில், எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோர் பேசிய பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். 

.