This Article is From Oct 10, 2019

Xi Jinping's Remark: காஷ்மீர் குறித்த சீன அதிபர் ஜின்பிங் கருத்திற்கு இந்தியா பதிலடி!

சீன அதிபர் காஷ்மீர் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறியதோடு, "முக்கிய நலன்களுக்காக" பாகிஸ்தானை ஆதரிப்பதாக இம்ரான் கானுக்கு உறுதியளித்தார்.

சென்னையில் நாளை பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திக்க உள்ளனர்

New Delhi:

காஷ்மீர் விவகாரம் எங்கள் உள்நாட்டு விவாகரம் என்றும், இதில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் சீன அதிபர் ஜின்பிங் கருத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் காஷ்மீர் நிலைமையை மிகுந்த கவனத்துடன் கவனித்து வருவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறிய சில மணி நேரங்களில், 'மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் இருந்து விலகி இருந்தால் அது அனைவரின் நலன்களுக்கும் நல்லது என இந்தியா பதில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, வரும் 11 - 12 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. 

பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறு உள்ளது. 

ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக சீனா, 'புதுடெல்லிக்கும் -இஸ்லாமாபாத்துக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்' என்று கூறியது, மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த சீன அதிபர் காஷ்மீர் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறியதோடு, "முக்கிய நலன்களுக்காக" பாகிஸ்தானை ஆதரிப்பதாக இம்ரான் கானுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியானது. 

இதனிடையே, ‘காஷ்மீர் பிரச்சனையை இருநாடுகள் பேசி தீர்வுகாண வேண்டும்” எனச் சீன அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சீனாவின் கருத்து குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் இம்ரான் கான் சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு, நிலையானது மற்றும் தெளிவானது. சீனாவும் எங்கள் நிலையை நன்கு அறியும் என்றார், மேலும், இது உள்நாட்டு விவகாரம். இந்த விவகாரத்தில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
 

.