ரஷ்ய அரசு, ஸ்பட்நிக்-ஐ ஏவிய பின்னர் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான முக்கியத்துவம் பற்றி இந்திய அரசுக்கு உணர்த்தினார் சாராபாய்.
New Delhi: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை நிறுவிய விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாள் இன்று. இதைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.
1962 ஆம் ஆண்டு இஸ்ரோ அமைப்பு உருவாக்கப்படும்போது விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய கமிட்டி என்றழைக்கப்பட்டது. அதைத் தொடங்கி வைத்தவர் இயற்பியலாளரும் அறிவியல் கண்டுபிடிப்பாளருமான விக்ரம் சாராபாய்.
1919 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய், அகமதாபாத்தில் பிறந்தார். குஜராத் கல்லூரியில் பட்டம் முடித்த அவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றார்.
முனைவர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்குத் திரும்பிய விக்ரம் சாராபாய், 1947, நவம்பர் 11 ஆம் தேதி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார். அப்போது அவருக்கு 28 வயது ஆனது.
ரஷ்ய அரசு, ஸ்பட்நிக்-ஐ ஏவிய பின்னர் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான முக்கியத்துவம் பற்றி இந்திய அரசுக்கு உணர்த்தினார் சாராபாய். இது குறித்து சாராபாய், “நம்மைப் போன்ற வளரும் நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து சிலர் கேள்வியெழுப்புகிறார்கள். மிகவும் உயர்ந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் பிரச்னைகள் தீர்க்கப்படும்” என்றார்.
இந்திய ஆணு ஆராய்ச்சித் திட்டத்தின் தந்தையாக கருதப்படும் ஹோமி பாபா, விக்ரம் சாராபாயின் முயற்சிகளைப் பாராட்டி வரவேற்றார். சாராபாயின், முதல் இந்திய ஏவுதள முயற்சிக்கும் அவர் துணையாக இருந்தார். 1963 ஆம் ஆண்டு, நவம்பர் 21 ஆம் தேதி, ஏவதளத்தில் முதன்முதலாக ராக்கெட் ஏவப்பட்டது.
1966 ஆம் ஆண்டு, சாராபாய், நாசா அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துதான், ஜூலை 1975 - ஜூலை 1976 வரையிலான காலக்கட்டத்தில் சைட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. சாராபாய், 1971 ஆம் ஆண்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது தொடர் முயற்சிகளால்தான், 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்திய அணு சக்திக் கழகத்தின் தலைவராகவும் சாராபாய் இருந்தார். அவரும் சில அகமதாபாத் தொழிற்சாலை உரிமையாளர்களும் எடுத்த தொடர் முயற்சிகளால்தான் அகமதாபாத்தில் ஐஐஎம் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த பவண் ராஜுர்கர் வரைந்த ஓவியத்தை மையமாகக் கொண்டு கூகுள் நிறுவனம், இன்று சிறப்பு டூடுளை வெளியிட்டு விக்ரம் சாராபாய்க்குப் புகழாரம் சூட்டியுள்ளது.