This Article is From Dec 30, 2018

‘நான் பிரதமர் ஆனதும் விபத்துதான்!’- தேவ கவுடா ஓபன் டாக்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மையமாக வைத்து, ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் ஜனவரி மாதம் வெளிவரப் போகிறது.

‘நான் பிரதமர் ஆனதும் விபத்துதான்!’- தேவ கவுடா ஓபன் டாக்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

Bengaluru:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மையமாக வைத்து, ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் ஜனவரி மாதம் வெளிவரப் போகிறது. அந்தப் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் பேசி வரும் நிலையில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ‘நான் பிரதமரானது கூட விபத்துதான்' என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. சில நாட்களுக்குமுன்னர் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி தேசிய பேசு பொருளாக மாறியுள்ளது. 

தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலைநில் இந்தப் படம் குறித்து கவுடாவிடம் கேட்கப்பட்டபோது, ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் திரைப்படம் வெளிவர எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் பிரதமர் ஆனது கூட விபத்துதான்' என்று கூறினார். 

1996 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து, தேவ கவுடாவை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தன. இந்த முடிவுக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து ஜூன் 1, 1996-ல் கவுடா இந்திய பிரதமராக பதவியேற்றார். காங்கிரஸ், கவுடாவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு 1997, ஏப்ரல் 21 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். 


 

.