This Article is From Jun 13, 2020

மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு!

தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு!

Bengaluru:

தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடகாவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள குபேந்திர ரெட்டி(ஜே.டி.எஸ்), ஹரிபிரசாத்(ஜே.டி.எஸ்), ராஜூவ் கவுடா(காங்), பிரபாகர் (பா.ஜ.க) ஆகியோரின் பதவி காலம் வரும் ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் 9ம் தேதி நிறைவடைந்தது.
இந்த நிலையில் கடைசி நாளில் (ஜே.டி.எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேட்புமனு தாக்கல் செய்தார்.  கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த இருவர் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதில், மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக அசோக் காஸ்தி, ரானா கடாடி ஆகிய இரண்டு புதிய எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது. இதேபோல், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா தனது கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர்.

தேவகவுடா போட்டியிடுவதற்கு தனது கட்சியின் ஆதரவு மட்டும் போதுமானதாக இல்லாததால், காங்கிரஸின் ஆதரவை உறுதிப்படுத்திய பின்னர், அவர் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே, பாஜகவும், மூன்றாவது வேட்பாளரை நிறுத்தாததால், கவுடாவின் இடம் உறுதியானது. 1996ல் பிரதமராக இருந்ததை தொடர்ந்து, இரண்டாவது முறையாக மாநிலங்களவையில் இடம்பெறுகிறார் தேவகவுடா. 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறும்போது, மத்திய தலைமையின் முடிவில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். "பாஜக மத்திய தலைமை, சாதாரண கட்சித் தொழிலாளர்களுக்கும் இடமளிப்பதன் மூலம் ஒரு பரிசை வழங்கியுள்ளது. அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். சாதாரண உறுப்பினர்களுக்கு இந்த மாற்றத்தை கொடுக்கும் முடிவை எடுக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து தேவகவுடா கூறியதாவது, "மக்களவை தேர்தலில் நான் தோல்வியடைந்த பின்னர், இனி தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். இன்றைய சூழ்நிலையில் - எனது கட்சியின் இரு அவைகளின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள். எனினும் நான் அதனை ஏற்கவில்லை. ஆனால் உங்கள் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், அதனால் தான் நாங்கள் கார்கே பெயரை மட்டுமே அனுப்பினோம் என்று சோனியா காந்தி கூறியதால் நான் ஒப்புக்கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

சபாநாயகர் உட்பட சட்டசபையில் 117 உறுப்பினர்களைக் பாஜக கொண்டிருந்ததால், நான்கு இடங்களில் இரண்டில் எளிதாக வெற்றியை உறுதிசெய்யும் நிலையில் இருந்தது. அதே நேரத்தில் காங்கிரஸூக்கு 68 எம்.எல்.ஏக்கள் பலம் இருந்ததால், ஒருவரை தேர்வு செய்ய முடிந்ததது. 

இதேபோல், சட்டசபையில் 34 உறுப்பினர்களைக் கொண்ட ஜே.டி.எஸ், மாநிலங்களவையில் ஒரு இடத்தை சொந்தமாக வெல்லும் நிலையில் இல்லை, ஆனால், காங்கிரஸின் ஆதரவுடன் அதனால் வெற்றி பெற முடிந்தது.

மாநிலங்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்சம் 45 வாக்குகள் தேவைப்பட்டன.

இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு தேவையில்லை, ஏனெனில் எந்தவொரு கட்சியும் ஒருவருக்கொருவர் எதிராக கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

(With inputs from PTI)

.