This Article is From Nov 04, 2018

“நடந்ததை மறந்து ராமர் கோயில் கட்ட உதவுங்கள்”- முஸ்லிம்களுக்கு சுஷில் மோடி அழைப்பு

ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அக்கறை காட்டவில்லை என்று பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்

“நடந்ததை மறந்து ராமர் கோயில் கட்ட உதவுங்கள்”- முஸ்லிம்களுக்கு சுஷில் மோடி அழைப்பு

கடந்த சில வாரங்களாக ராமர் கோயில் விவகாரத்தை பாஜக தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.

Patna:

அயோத்தியில் ராமர் கோயிலை விரைந்து கட்ட வேண்டும் என பீகார் மாநில துணை முதல்வரும் பாஜக-வின் முக்கிய தலைவருமான சுஷில் குமார் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களுக்கு சுஷில் குமார் அளித்த பேட்டி-

முஸ்லிம்கள் நடந்தை மறந்து விட்டு ராமர் கோயில் கட்டுவதற்காக எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். பள்ளிவாசலை எங்கு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். ஆனால், ராமர் கோயிலை அவர் பிறந்த இடத்தில் மட்டும்தான் கட்ட முடியும்.

கர்நாடகத்தில் ஏற்பட்ட அரசியல் சிக்கலை நள்ளிரவில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு நேரம் இருக்கிறது. அர்பன் நக்சல் விவகாரத்தை விசாரிக்க முன்னுரிமை அளிக்கிறது. ஆனால் ராமர் கோயில் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திப் போடுகிறது. அதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களாக ராமர் கோயில் விவகாரத்தை பாஜக தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ராமர் கோயில் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத் கூறுகையில், “உங்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்றால் ராமரை பிரார்த்தனை செய்யுங்கள். எண்ணங்கள் நிறைவேறும். ராமர் கோயிலை கட்டும் நேரம் வந்து விட்டது. இந்த தீபாவளியில் இருந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்” என்றார்.

.