பயப்பட வேண்டாம்: பரிசோதனை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது: ராதாகிருஷ்ணன்
ஹைலைட்ஸ்
- பரிசோதனை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது
- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம்
- கோயம்பேடு பகுதியில் மாநில பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கையைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டாம், பரிசோதனை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறும்போது, கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. கோயம்பேட்டிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. நோய்கட்குப்பாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். பரிசோதனை அதிகமாக நடத்தி வருவதால் பாதிப்பும் அதிகமாகத் தெரியவருகிறது. தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டாம், அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. கோயம்பேடு பகுதியில் மாநில பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை ஒரு விழுக்காடுதான் உள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது.
தமிழகத்தின் இறப்பு விகதம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவாகத் தான் உள்ளது. அனைத்து வகையான மருத்துவ முறையிலும் கொரோனாவுக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். சென்னையில் நாளொன்றுக்கு 3,000 பேருக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இன்றைக்கும் மக்கள் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்தி சில்லறைப் பொருட்கள், காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் வாங்க அடிக்கடிச் செல்லக்கூடாது. வீட்டுக்குள்ளும் அதிக கவனம் வேண்டும். கைகளைக் கழுவ வேண்டும், காய்கறிகளைக் கழுவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.