This Article is From Jan 02, 2020

''மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் மாதிரி திட்டம் தயார்'' - NDTVக்கு கே.சிவன் பேட்டி

இந்திய விமானப்படையை சேர்ந்த 4 பைலட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார். அவர்கள் அடுத்த கட்டமாக ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

''மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் மாதிரி திட்டம் தயார்'' - NDTVக்கு கே.சிவன் பேட்டி

ககன்யான் மற்றும் சந்திரயான் 3 திட்டங்கள் தொடர்பாக NDTV க்கு கே.சிவன் பேட்டி அளித்துள்ளார்.

New Delhi:

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் மாதிரி திட்டம் நிறைவு பெற்று தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைவர் கே.சிவன், NDTVக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 4 பைலட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார். அவர்கள் அடுத்த கட்டமாக ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் யார் என்கிற விவரத்தை வெளியிட இஸ்ரோ தலைவர் சிவன் மறுத்து விட்டார். 

இருப்பினும், பைலட்டுகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்பாகவும் இருந்ததால் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று சிவன் தெரிவித்தார். 

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர் இருப்பதாகவும், ஏற்கனவே குறிப்பிட்ட 4 பேருக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் அவர்களுக்கு மாற்றாக பட்டியலில் உள்ளவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று சிவன் விளக்கியுள்ளார். 

ககன்யான் திட்டம் குறித்து தெரிவித்த இஸ்ரோ தலைவர், அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது தொடக்கத்தில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.சந்திரயான் 3 திட்டம் குறித்து அவர் பேசுகையில், ஏற்கனவே உள்ள ஆர்பிட்டர் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும், விண்ணில் செலுத்துவதற்கு புதிய அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 'இந்தாண்டுதான் ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்திருந்தோம். ஆனால் அது அடுத்தாண்டு வரைக்கும் சென்று விட்டது. சந்திரயான் 3-யை பொறுத்தவரையில், ஏற்கனவே உள்ள ஆர்பிட்டர் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். ஏவும் அமைப்பு மட்டும் மாறுபடும். 7 ஆண்டுகளாக சந்தியரான் 2-ல் பயன்படுத்தப்பட்ட பின்னரும், ஆர்பிட்டரின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிலவைப் பற்றிய ஆய்வுகளை அது தொடர்ந்து மேற்கொள்ளும். நிலப்பரப்பு, அதனைச் சுற்றியுள்ள அமைப்புகள் தொடர்பாக இந்த ஆய்வு அமைந்திருக்கும்.

விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கிய பின்னர், பிரதமர் மோடி என்னை ஆரத் தழுவினார். அது எனக்கு ஆறுதலை அளித்தது. இந்த ஆரத் தழுவுதல் எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்தது. எனது மனதில் என்ன ஓடியது என்பதை பிரதமர் மோடி அறிந்து கொண்டார். அது மிகப்பெரிய தருணம்' என்று சிவன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மிகக்குறைந்த செலவில் நிலவை ஆய்வு செய்யும் திட்டங்களை வகுத்து வருகிறது. இது மற்ற நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக சந்திரயான் 2 திட்டம் 14 கோடி அமெரிக்க டாலர் செலவில் செய்து முடிக்கப்பட்டது. 

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன்  நேற்று அளித்த பேட்டியில், அடுத்ததாக இஸ்ரோ அனுப்பவிருக்கும் லேண்டர் மற்றும் நிலவின் பரப்பில் செல்லும் Surface Rover ஆகிய கருவிகளின் மதிப்பு 3.50 கோடி அமெரிக்க டாலர் என்று தெரிவித்தார். 

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தின்போது சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டது. இதன்பின்னர், அடுத்த திட்டத்தை இஸ்ரோ அதிரடியாக கொண்டு வந்துள்ளது. 

.