This Article is From Sep 25, 2018

‘எதற்காக ரிலையன்ஸுடன் கூட்டு சேர்ந்தோம்?’- ரகசியம் உடைக்கும் டசால்டு நிறுவனம்

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுப் புது தகவல்கள் வெளியாகி விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கிறது

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்காக சிபாரிசு செய்யப்படவில்லை, டசால்ட் தகவல்

New Delhi:

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுப் புது தகவல்கள் வெளியாகி விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், எதற்காக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தோம் என்பது குறித்தான ரகசியத்தை உடைத்துள்ளார். 

8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலைன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான முறையற்றப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது. 
 

v72mjkg

கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பு, ‘எந்த வித ஆதாரமுமின்றி காங்கிரஸ் தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய்களை சொல்லி வருகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தை போடுவது குறித்து முதன் முதலில் பேச ஆரம்பித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான்’ என்று பதிலடி கொடுத்தது. 

இப்படி இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, ‘இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது. இது குறித்து எங்களுக்கு எந்த தேர்ந்தெடுக்கும் உரிமையும் தரப்படவில்லை’ என்று பகீர் தகவலை தெரிவித்தார். ஆனால் அடுத்த நாளே, ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, டசால்ட் நிறுவனம் தான், ரிலையன்ஸ் குழுமத்தின் பங்கு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தடாலடியாக கருத்தை மாற்றிக் கூறினார். 
 

n8ueplt

ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதியளவு நிதியான 30,000 கோடி ரூபாயை டசால்ட் நிறுவனம், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து விமானத்துக்குத் தேவையான பாகங்களை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தான், இந்தியாவில் விமான பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் குழுமத்தை தேர்ந்தெடுத்தது டசால்ட். 

இது குறித்து டசால்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர் நம்மிடம் பேசினார். ‘ரிலையன்ஸ் குழுமத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தற்கு பல காரணங்கள் இருந்தது. எம்.சி.ஏ உடன் தங்களை பதிவு செய்திருந்தது ரிலையன்ஸ் குழுமம். மேலும் அவர்களுக்கு நாக்பூரில் நிலம் இருந்தது. அந்த நிலத்திலிருந்து ரன்வே-வுக்கு போவதும் சுலபம். முகேஷ் அம்பானியின் வசமிருந்து ரிலையன்ஸ் குழுமத்தின் விமானத் தயாரிப்பு பிரிவு அனில் அம்பானி வசம் சென்ற பிறகு, அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்’ என்று தெரிவித்துள்ளார். 

இது ஒருபுறமிருக்க ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் டசால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டேப்பியர், ‘ரஃபேல் ஒப்பந்தத்தை அடுத்து, ஹெச்.ஏ.எல் நிறுவனத்துடன் இணைந்து பணி செய்வது குறித்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்’ என்று பேசினார். அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. 

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய டசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நபர், ‘அப்போது எங்கள் நிறுவனத்தின் தலைவர் 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் குறித்து பேசினார். அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நினைத்து அவர் அப்படி பேசினார். அவருக்கு இந்திய ராணுவ அமைச்சகத்திற்குள் என்ன நடக்கிறது என்பது எப்படித் தெரியும்?’ என்றுள்ளார். 

இந்திய பொதுத் துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்-ஐ வேண்டுமென்றே ரஃபேல் ஒப்பந்தத்திலிருந்து மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

ஹாலண்டேவின் கருத்து குறித்து மத்திய அரசு தரப்போ, ‘அவர் மீது பிரான்ஸில் பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. எனவே தான் அவரை காப்பாற்றிக் கொள்ள இப்படி பேசியுள்ளார்’ என்றது. பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் பேசியபோது, ‘ஹாலண்டேவின் பேச்சால் இரு நாட்டு உறவு பாதிப்புக்கு உள்ளாகும்’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 

.