அமெரிக்காவில் அதிகபட்சமாக கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 1,169 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இதுவே உலகளவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும்.
இது, புதன்கிழமை இரவு 8.30 மணி முதல் வியாழக்கிழமை 8.30 மணி வரையிலான நேரத்தில் உள்ள எண்ணிக்கை என பல்கலைக்கழகம் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இத்தாலியில் அதிகபட்சமாக மார்ச்.27ம் தேதி 969 பேர் வரை ஒரே நாளில் உயிரிழந்தனர். தொடர்ந்து அமெரிக்காவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிப்புக்கு 5,926 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில், இத்தாலியில் அதிகபட்சமாக 13,915 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஸ்பெயினில் 10,003 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் மட்டும் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 243,000 ஆக அதிகரித்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் தொற்று அதிகமாக உள்ள நியூயார்க் பகுதியில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று துணை அதிபர் மைக் பென்ஸ் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"நாங்கள் இப்போது ஒரு நாளைக்கு 100,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தி வருகிறோம்," என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அதே சந்திப்பில் கூறினார், "உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு ஆகும்.
இந்த வைரஸால் அமெரிக்காவில் 100,000 முதல் 240,000 பேர் வரை உயிரிழப்புகள் ஏற்படும் என வெள்ளை மாளிகை கணிப்புகள் தெரிவித்தன.