This Article is From Apr 12, 2020

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக பிரிக்கிறது மத்திய அரசு!

இந்தியாவில் 400 நகரங்கள் பசுமை நகரங்களாக உள்ளன. அதாவது கொரோனா தொற்று ஏற்படாத நகரங்களாக இவை இருக்கின்றன.

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக பிரிக்கிறது மத்திய அரசு!

இந்தியாவில் 8,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் 8,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை 21 நாட்கள் அறிவித்திருந்தார். இதனையொட்டி பல மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்திருந்தன. இந்த நடவடிக்கை காரணமாக பல்வேறு முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ளது. பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரம் இழந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை மீட்டெடுக்கவும் அரசு முயன்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோன தொற்று பாதித்த இடங்களைச் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களைக் கொண்டு அடையாளப்படுத்த அரசு முயன்று வருகின்றது.

இந்தியாவில் 400 நகரங்கள் பசுமை நகரங்களாக உள்ளன. அதாவது கொரோனா தொற்று ஏற்படாத நகரங்களாக இவை இருக்கின்றன. இவை பச்சை நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்படும்.

ஆரஞ்சு நிறம் என்பது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருப்பின் அந்த நகரங்கள் ஆரஞ்சு நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். மேலும், இப்பகுதிகளில் தொற்று பரவல் இல்லையென உறுதி செய்யப்பட்ட பின்பு பொது போக்குவரத்தினை இப்பகுதியில் அனுமதிப்பது, விவசாய விளை பொருட்கள் அறுவடைக்கு அனுமதி அளிப்பது, போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15க்கும் அதிகமாக இருக்கும் இடங்கள் சிவப்பு நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்படும் இங்கு எவ்வித நடவடிக்கையும் அனுமதிக்கப்படமாட்டாது.

பிரதமர் மோடி நேற்று தனது உரையில், வாழ்க்கை இருந்தால்தான் உலகம் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் குறித்து முடிவுகளை எடுக்க முயன்று வருகிறார்.

இந்தியாவின் முந்தைய வளர்ச்சி 4.8-5.0 ஆக இருந்தது. தற்போது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி என்பது 1.5-2.8 என்கிற அளவில்தான் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

முன்னதாக முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடிய மோடி, உள்கட்டமைப்பு துறையில் தளர்வு அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில், குறிப்பாகப் பஞ்சாபில் கோதுமை அறுவடைக் காலம் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் அறுவடை சார்ந்த விவசாய துறைக்கும் தளர்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படியாக ஊரடங்கு நடவடிக்கையிலிருந்து தளர்த்தப்படும் துறைகள் குறித்த அறிவிப்பினை மத்திய உள்துறை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் உணவு பதப்படுத்துதல், விமான போக்குவரத்து, மருந்துகள், தொழில்கள், கட்டுமானம் போன்றவை அடங்கும், ஆனால் சமூக விலகல் என்பது வழக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.