This Article is From Apr 27, 2020

தமிழக முதல்வரின் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டதா? வீடியோவால் சர்ச்சை

தமிழகத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 1,020 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

தமிழக முதல்வரின் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டதா? வீடியோவால் சர்ச்சை

அரசு மீதான குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • முதல்வர் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது
  • தமிழக அரசு மீதான விமர்சனங்களை போலீசார் மறுத்துள்ளனர்.
  • ஆம்புலன்ஸில் நோயாளிகள் இல்லை. விதிமீறிய வாகனங்கள் நிறுத்தப்பட்டன : போலீஸ்
Chennai:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதா என்ற சர்ச்சையை செல்போன் வீடியோ ஒன்று ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை போலீசார் மறுத்துள்ளனர். 

வீடியோ காட்சியில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனுடன் 2 சக்கர வாகனத்தில் வருவோர், கார்கள், பாதசாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஊரடங்கு விதிகளை மீறியிருப்பதுபோல் தெரிகிறது. 

இந்த நிலையில், வீடியோ காட்சிகளுக்கு சென்னை போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதற்காக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், நிறுத்தப்பட்ட ஆம்புலன்சுகளில் நோயாளிகள் யாரும் இல்லை என்றும் போலீஸ் கூறியுள்ளது. இதேபோன்று தனது வாகனத்திற்காக போக்குவரத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விமர்சித்து வருகின்றன. சாலைகள் காலியாக இருக்கும் நிலையில் இப்படி போக்குவரத்தை நிறுத்தி வைக்க ஏன் அவசியம் ஏற்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதுகுறித்து திமுகவின் மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ''முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி'' என்று விமர்சித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

நேற்று தொடங்கிய இந்த முழு ஊரடங்கு புதன் கிழமை வரை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது. 

இதையொட்டி, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக நேற்று இந்த 5 மாநகரங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கடைகள் இயங்கும் நேரத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியவில்லை. 

தமிழகத்தில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 1,020 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

.