This Article is From Jan 12, 2019

உ.பி.யில் காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுப்போம்: அகிலேஷ் திட்டவட்டம்!

அகிலேஷ் யாதவ், மாயவதி கூட்டணியில் சிறு கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) மற்றும் நிஷாத் கட்சி உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிகிறது.

பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Kannauj, Uttar Pradesh:

காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம், அவர்கள் கூட்டணியில் இடம் பெறுகிறார்கள், இல்லையென்பது குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோர்த்துள்ளன.

இந்த இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. இதனையடுத்து பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் வசம் ஆட்சி சென்றது.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக சிறு சிறு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம், சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதிகளை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸூக்கு கொடுக்க வாய்ப்பில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தங்கள் கூட்டணியை இறுதி செய்து நாளை அறிவிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

.