This Article is From Jul 20, 2018

'ஒரு எம்.பி கூட இல்லாத நிலையில்…’- ஸ்டாலினைச் சீண்டிய தமிழிசை

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்

'ஒரு எம்.பி கூட இல்லாத நிலையில்…’- ஸ்டாலினைச் சீண்டிய தமிழிசை
Chennai:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் கருத்து கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அவரது அறிக்கையில், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்ற ஜனநாயகத்திலும், இந்துத்துவாவின் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியலுக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையிலும், ஒற்றைச் செயல் திட்டத்தை நிறைவேற்றிடும் நோக்கத்திலும் ஆக்கபூர்வமான திருப்புமுனையாக அமையும் என்று நாடெங்கிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த உணர்வுகளை அவமதித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானங்களைத் தூக்கியெறிந்து, மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடாவடியாகப் பறித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை மக்களவையில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து பேசிய தமிழிசை, ‘எதிர்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக எடுத்து வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒரு லோக்சபா எம்.பி கூட இல்லாத நிலையில், அதற்கு தார்மீக ஆதரவு கொடுத்துள்ளார் ஸ்டாலின். மக்கள் ஒரு நாளும் காங்கிரஸ் கட்சியையோ, திமுக-வையோ நம்பப் போவதில்லை. பாஜக மீது தான் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தில் மத்திய அரசு கண்டிப்பாக வெற்றி பெறும். மக்கள் ஆதரவை பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். தமிழகத்துக்கு பாஜக துரோகம் இழைத்துள்ளதாக திமுக கூறி வரும் நிலையிலும், காவிரி மேலாண்மை வாரியம், ஏய்ம்ஸ் மருத்துவ அமைப்பு போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது’ என்று பேசியுள்ளார்.


 

.