This Article is From Feb 12, 2020

டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிப்.16ம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்!

Delhi Election Results 2020: பாஜகவின் தீவிர பிரச்சாரத்தை முறியடித்து, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.

Delhi Election Results: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, வரும் பிப்.16ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இன்று காலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்த கெஜ்ரிவால் சுமார் 15 நிமிடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தை நடத்தினார். வார இறுதியில் நடைபெற உள்ள பதவியேற்பு விழா குறித்து தான் ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தியாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. 

பாஜக ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், 2015 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அது கணிசமான தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியுள்ளது. பாஜகவின் பிளவுப்படுத்தும் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஆம் ஆத்மியும், எதிர்கட்சிகளும் பாராட்டியது.

இதுபோன்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த கெஜ்ரிவால் மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 2013 வரை 15 வருடங்களாக டெல்லியை ஆண்டு வந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 

ஆம் ஆத்மி வெற்றி குறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “புதிய ரகமான அரசியலுக்கு இந்த தேர்தல் வெற்றி வித்திட்டுள்ளது. இது பாரத தாய்க்கு கிடைத்த வெற்றி” என்று கூறினார். மேலும், இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல. டெல்லி மக்களுடைய வெற்றி. என்னை மகனாக நினைத்த குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி. 24 மணிநேரமும் மின்சார வசதி பெற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி' என்று கூறினார். 

.